உலகக்கோப்பை போட்டி: இந்தியாவும், பாகிஸ்தானும் மூன்று முறை மோதுமா..? ஐ.சி.சி.யின் புதியமுறைகள் குறித்த விளக்கம்!

0
3

50 ஓவர், 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ள ஐ.சி.சி, சூப்பர்7 சுற்று, எலிமினேட்டர் முறையை அறிமுகம் செய்கிறது.

உலகக்கோப்பை ஒருநாள் போட்டி

14-வது 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2027) அக்டோபர் 4-ந்தேதி தொடங்கி நவம்பர் 21-ந் தேதி வரை ஆப் பிரிக்க நாடுகளான தென்ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமிபியா ஆகிய நாடுகளில் நடக்கிறது. இதில் 14 நாடுகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் நாடுகளில் முழு உறுப்பினர் அந்தஸ்து பெற்ற தென்ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் வரும் செப்டம்பர் மாத நிலவரப்படி தரவரிசையில் டாப்-8 இடங்களில் உள்ள அணிகள் போட்டிக்கு நேரடி யாக தகுதி பெறும். மீதமுள்ள 4 இடங்களுக்குரிய அணிகள் தகுதி சுற்று மூலம் தேர்வாகும்.

சுவாரசியமாக.. விறுவிறுப்பாக..

இந்த நிலையில் உலகக்கோப்பை போட்டியை மேலும் சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் கொண்டு செல்ல என்னென்ன மாற்றங்களை செய்யலாம் என்பது குறித்து ஸ்காட்லாந்தின் எடின்பர்க் நகரில் நடந்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதன் முடிவில் சில அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

முற்றிலும் மாற்றம்

2023-ம் ஆண்டு உலகக் கோப்பையில் 10 அணிகள் விளையாடின. 2027-ம் ஆண்டு உலகக் கோப்பையில் அணிகளின் எண்ணிக்கையை 14 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்ட போது, லீக் முடிவில் 6 அணிகள் சூப்பர்6 சுற்றுக்கு முன்னேறும் வகையில் போட்டி அட்டவணை அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அந்த நடைமுறையில் தற்போது முற்றிலும் மாற்றம் செய்யப்படுகிறது. இதன்படி 12, 13 மற்றும் 14-ம் நிலையில் உள்ள அணிக்கு ‘சூப்பர்சீரிஸ்’ என்ற பெயரில் முதல் சுற்று நடத்தப்படும். அதில் இருந்து ஒரு அணி குரூப் சுற்றுக்கு முன்னேறும்.

முதல்முறையாக சூப்பர்7 சுற்று

குரூப் சுற்றில் 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் தலா ஒரு முறை மல்லுக்கட்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் டாப்-3 இடங்களை பிடிக்கும் அணிகள் மற்றும் 4-வது இடத்தை பிடிக்கும் சிறந்த ஒரு அணி என மொத்தம் 7 அணிகள் சூப்பர்7 சுற்றுக்குள் நுழையும். அதாவது சூப்பர்7 சுற்று முதல்முறையாக அறிமுகம் செய்யப்படுகிறது.

பின்னர் சூப்பர்7 சுற்றுக்கு வரும் 7 அணிகளும் ரவுண்ட்ராபின் அடிப்படையில் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் கால்பதிக்கும்.

‘உலகக் கோப்பை தொடரில் ஒவ்வொரு கட்டத்திலும் போட்டித்தன்மையை வலுப்படுத்தும் நோக்கில் இத்தகைய முறை வடிவமைக்கப்பட்டுள்ளது’ என ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.

20 ஓவர் உலகக்கோப்பை

இதே போல் 2028-ம் ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து இணைந்து நடத்தும் 11-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் மறுசீரமைப்பு செய்யப்படுகிறது. இதில் 20 அணிகள் களம் காணுகின்றன.

சூப்பர்8 சுற்று கிடையாது

முன்பு 20 அணிகள் தலா 5 அணிகள் வீதம் 4 பிரிவாக பிரிக்கப்பட்டன. இனி தலா 4 அணிகள் வீதம் 5 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 அணிகள் என மொத்தம் 10 அணிகள் சூப்பர் 10 சுற்றுக்குள் வரும். அதாவது இந்த தடவை சூப்பர்8 சுற்று கிடையாது.

எலிமினேட்டர்

சூப்பர்10 சுற்றில் அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதும். இதன் முடிவில் இரு பிரிவிலும் முதலிடத்தை பிடிக்கும் அணிகள் நேரடியாக அரைஇறுதியை எட்டும். அடுத்து இரு பிரிவிலும் 2-வது மற்றும் 3-வது இடத்தை பிடிக்கும் அணிகள் இரு ‘எலிமினேட்டர்’ சுற்றில் சந்திக்கும்.

இவற்றில் வெற்றி பெறும் இரு அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். ‘எலிமினேட்டர்’ புதிதாக அறிமுகமாகிறது. ஆனால் மொத்தமுள்ள ஆட்டங்களின் எண்ணிக்கையில் மாற்றமில்லை. 55 ஆட்டங்கள் தொடரும்.

இந்தியா- பாகிஸ்தான்
புதிய மாற்றங்களின்படி பார்த்தால் பரம எதிரிகளான இந்தியாவும், பாகிஸ்தானும் குரூப் சுற்று, சூப்பர்7, அரை இறுதி அல்லது இறுதிப் போட்டி என 3 முறை நேருக்கு நேர் மோதும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here