சிகாகோவில் இறுதி சடங்கு மையத்தில் உடல்கள் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இறுதி சடங்கு மையத்தை கிளார்க் மோர்கன்-ஜோஹனா மோர்கன் என்ற தம்பதி நடத்தி வந்த நிலையில், அவர்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேற்கத்திய நாடுகளில் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் அல்லது தகனம் செய்வதற்கு முன்பாக, அந்த உடலை குளிப்பாட்டி, புதிய உடைகள் அணிவித்து தயார் செய்வதற்கென இறுதி சடங்கு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் உயிரிழந்தவர்களின் உடல்களை அவர்களை குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பார்ப்பதற்கும், நினைவேந்தல் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும் இந்த இறுதி சடங்கு மையங்களில் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
அழுகிய நிலையில் உடல்கள்
அந்த வகையில், அமெரிக்காவின் இலினாய்ஸ் மாகாணத்தில் உள்ள சிகாகோ நகரில் தனியார் இறுதி சடங்கு மையம் ஒன்று செயல்பட்டு வந்தது. அந்த மையத்தில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அங்குள்ள மக்கள் நகர நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து நகராட்சி அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை நடத்தியபோது, அந்த இறுதி சடங்கு மையத்தில் முறையான பராமரிப்பு, குளிர்சாதன வசதிகள் இல்லாமல் சுமார் 50-க்கும் மேற்பட்ட உடல்கள் அழுகிய நிலையில் இருந்தது கண்டறியப்பட்டது.
சட்ட நடவடிக்கை
இதையடுத்து அதிகாரிகள் அங்கிருந்த உடல்களை கைப்பற்றி, அவர்களின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். பல உடல்கள் அழுகிய நிலையில் இருப்பதால், இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களின் அடிப்படையில் முறையான சட்ட நடவடிக்கைகளுக்கு பிறகே உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும், இந்த பணிகள் முடிவடைய பல நாட்கள் ஆகக்கூடும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இது இரண்டாவது முறை..!
இந்த இறுதி சடங்கு மையத்தை கிளார்க் மோர்கன்-ஜோஹனா மோர்கன் என்ற தம்பதி நடத்தி வந்த நிலையில், அவர்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த விவகாரம் தொடர்பாக கைது நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. மேலும், இது தொடர்பான முதற்கட்ட விசாரணையில், கிளார்க் மோர்கன்-ஜோஹனா மோர்கன் தம்பதி ஏற்கனவே தகன மையம் ஒன்றை நடத்தி வந்ததாகவும், அங்கும் இதே போல் உடல்கள் முறையான பாதுகாப்பு இல்லாமல் கையாளப்பட்டது, தகனம் செய்யப்பட்ட சாம்பலை உறவினர்களிடம் முறையாக ஒப்படைக்காதது உள்ளிட்ட புகார்களால் தகன மையத்தின் உரிமம் கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
dailythanthi




