தெறிக்க ஓடவிடும் துன்பியல் சம்பவம்!

0
9
hindutamil

அடர்ந்த தாடியுடன் யஷ், அவரது மூக்கு முடி வரை தெரியும் அளவிலான மிக நெருக்கமான க்ளோஸ்-அப் காட்சியில், தலையைச் சாய்த்துக்கொண்டு சிகரெட் அல்லது சிகாரைப் பற்றவைத்து புகைத்து தள்ளுகிறார். படம் முழுக்க திரையில் புகைப்பிடிப்பது, மது அருந்துவது தொடர்பான எச்சரிக்கை வாசகம் இடம்பெறாத காட்சிகளே இல்லை. தொப்பி மற்றும் நீளமான லெதர் கோட் அணிந்து கொண்டு, கேமராவை நோக்கி நேராகவோ பக்கவாட்டிலோ நடந்து வந்து, துப்பாக்கிகளாலும் வெறும் கரங்களாலும் ஆட்களைக் கொன்று குவிக்கிறார்.

இதை வேலையைத்தான் ‘கேஜிஎஃப்’ படங்களிலும் செய்தார் என்றாலும் முன்பே குறிப்பிட்டதைப் போல திரைக்கதை என்ற வஸ்து அவற்றை தாங்கிப் பிடித்தது. ஆனால் இங்கு அதேபோன்ற காட்சிகள் படம் முழுவதும் கிட்டத்தட்ட 50 முறை அப்படியே திரும்பத் திரும்ப வருகின்றன.

படத்தில் பல பெண் கதாபாத்திரங்கள் இருந்தாலும், யாருக்கும் முறையான தொடக்கமோ முடிவோ இல்லை. ருக்மிணி வசந்தின் கதாபாத்திரம் ஏன் ராயாவைக் காதலிக்கிறது என்பதற்குப் பதிலில்லை. கியாரா அத்வானியின் கதாபாத்திரத்துக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. நயன்தாராவின் சகோதரி கதாபாத்திரமும், ஹூமா குரேஷியின் கதாபாத்திரமும் வெறும் பெயரளவில் மட்டுமே வந்து செல்கின்றன.

படம் ஒரு மாஃபியா கதையாகத் தொடங்கி, அக்கா – தம்பி பாசத்த்துக்கு மாறி, திடீரென ஒரு காதல் கதையாக உருவெடுத்து, பின்னர் தந்தை – மகன் பழிவாங்கும் கதையாக மாறி, இறுதியில் ஒரு சைக்காலஜிகல் திரில்லர் என தன் விருப்பம்போல பயணிக்கிறது.

இரண்டாம் பாதி பார்வையாளர்களின் பொறுமையை இன்னும் அதிகமாகச் சோதிக்கிறது. கதை தந்தை – மகன் பழிவாங்கும் கதையாக மாறும்போது படம் முற்றிலும் சுவாரஸ்யமற்றுப் போகிறது. யாருடைய கும்பல் எது, யார் யாரைத் தாக்குகிறார்கள், யார் யாரைக் காப்பாற்றுகிறார்கள் என்ற குழப்பம் தலைவலியை தருகிறது. 3 மணி நேரம் 15 நிமிடங்கள் நீளும் இப்படத்தில் குறைந்தது 3 மணி நேரத்தையாவது வெட்டி இருக்க வேண்டும் போல.

சில ஆண்டுகளுக்கு முன் வந்த ‘அனிமல்’ திரைப்படத்தின் தாக்கம் படத்தில் மிதமிஞ்சி இருக்கிறது. காட்டுமிராண்டி போல செயல்படும் நாயகனின் பிம்பத்தையே இதில் பயன்படுத்தியுள்ளனர். ஹீரோ யாரையாவது கொல்கிறார் அல்லது ஏதேனும் ஒரு பெண்ணுடன் கூத்தடிக்கிறார்.

பணத்தைச் செலவழிப்பதில் தயாரிப்பு நிறுவனம் எந்தக் கஞ்சத்தனமும் காட்டவில்லை. காட்சிகளும் தயாரிப்பு வடிவமைப்பும் படத்தின் மிகப் பெரிய பலம். ரவி பஸ்ரூரின் பின்னணி இசை மிகப் பெரிய ஏமாற்றம். கேஜிஎஃப் படங்களை தூக்கி நிறுத்திய அவரது இசை, இங்கு ஏற்கெனவே இருக்கும் தலைவலியை இரு மடங்காக்குவதில் செவ்வனே செயல்பட்டுள்ளது.

வசனங்கள் பல இடங்களில் குபீர் ரகம் “நான் ராணி மாதிரி வாழ்றேன், நீ சாணி மாதிரி வாழ்ற”, “யாரோட ரூட் மேப்ல இருக்கியோ, அவங்களோட ரூட்டை சந்தேகப்படாதே; இல்லன்னா ரூட்டோட பிடுங்கப்படுவாய்” போன்ற வசனங்கள் படத்தில் நகைச்சுவை இல்லாத குறையை போக்கி ஆடியன்ஸை வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளன.

படத்தில் க்ளைமாக்ஸ் ஒரு நல்ல சைக்காலாஜிக்கல் முயற்சி. ஆனால் ஒட்டுமொத்த படத்தையும் வீணடித்து விட்டு இப்படி ஒரு காட்சியை எழுதி என்ன பயன்?

யஷ்ஷிடமிருந்து வந்திருக்கும் இந்த ‘டாக்ஸிக்’ மாபெரும் ஏமாற்றமே. பல வருட உழைப்பும், கோடிக்கணக்கான பணமும், திறமையான நடிகர்களின் பங்களிப்பும் பலவீனமான எழுத்தால் வீணடிக்கப்பட்டுள்ளது.

கதையோ உணர்வுகளோ இல்லாத இந்த ரத்தக் களறி, பார்வையாளர்களின் பொறுமையைச் சோதிக்கும் ஒரு 3 மணி நேர துன்பியல் சம்பவம். படத்தைப் பார்த்துவிட்டு வெளியேறும் போது ஒருவித அசவுகரியமும் தலைவலியுமே மிச்சம். படத்தை தவறவிட்ட 18 வயதுக்கு உட்பட்டோர் அதிர்ஷ்டசாலிகள்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here