ஈரானுடன் பேச்சுவார்த்தைக்கு காலக்கெடு இல்லை – ட்ரம்ப்!

0
41
thamilan

அமெரிக்காவுடனான மோதலை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு திரும்புவதற்கு எந்தவொரு குறிப்பிட்ட காலக்கெடுவும் விதிக்கப்படவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரான் பேச்சுவார்த்தைக்கு திரும்புவதில் தமக்கு எந்த அவசரமும் இல்லை என தெரிவித்துள்ள டிரம்ப், ஈரான் எவ்வளவு காலம் எடுத்துக்கொண்டாலும் பரவாயில்லை என குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா தற்போது நடைபெற்று வரும் மோதலில் “மிகப்பெரிய வெற்றியை” பெற்று வருவதாகவும், ஈரான் கடுமையான பணவீக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் இரண்டுமே பலனளித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில், மோதல் பதற்றத்தைத் தணித்து பேச்சுவார்த்தைக்கு உகந்த சூழலை உருவாக்கும் நோக்கில், கட்டார் பிரதமர் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி, ஈரான் அதிகாரிகளைச் சந்திப்பதற்காக வியாழக்கிழமை தெஹ்ரானுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக கட்டார் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

இராஜதந்திர பேச்சுவார்த்தையே கருத்து வேறுபாடுகளைத் தீர்ப்பதற்கும் பிராந்தியத்தில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கும் சிறந்த வழி என கட்டார் தெரிவித்துள்ளது.

மேலும், ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தின் சுதந்திரம் மற்றும் கடந்த பெப்ரவரி 28ஆம் திகதிக்கு முன்னர் காணப்பட்ட நிலைமைக்கு அது திரும்ப வேண்டியதன் அவசியம் குறித்தும் பேச்சுவார்த்தைகளில் கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நடைபெற்று வரும் இராணுவ நடவடிக்கைகளின்போது கடுமையாக காயமடைந்திருந்தாலும், ஈரானின் ஆன்மீக தலைவர் மொஜ்தபா கொமெய்னி உயிருடன் இருப்பதாக தாம் நம்புவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தற்போதைக்கு ஈரானுக்கு எதிராக புதிய இராணுவத் தாக்குதல்களை நடத்தும் எண்ணம் அமெரிக்காவுக்கு இல்லை என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, நட்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here