ரஷியா-வடகொரியா இடையே புதிய பாலம் திறப்பு!

0
31
dailythanthi

ஆயுதங்களை வழங்கி வரும் வடகொரியா

ரஷியா மற்றும் உக்ரைன் இடையே கடந்த சில ஆண்டுகளாகவே கடுமையான போர் நீடித்து வருகிறது. இந்த வாரத்தில் கூட உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷியா மிகப் பயங்கரமான வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில், ரஷியாவுக்கு ஆதரவாக வடகொரியா தனது ராணுவ வீரர்களையும், பெருமளவிலான ஆயுதங்களையும் வழங்கி உதவி வருவதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.

சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி, இந்த இரு கம்யூனிச நாடுகளின் நட்பு நாளுக்கு நாள் பலமடைந்து வருகிறது. இந்நிலையில், ரஷியா மற்றும் வடகொரியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம் மற்றும் ராணுவக் கூட்டை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் விதமாக, இரு நாடுகளையும் இணைக்கும் முதலாவது புதிய சாலைப் பாலம் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

இருவழிச் சாலைப் பாலம்

துமேன் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த 1 கி.மீ. நீளமுள்ள இருவழிச் சாலைப் பாலம், வடகொரியாவின் ராசான் நகரையும், ரஷியாவின் காசான் நகரையும் நேரடியாக இணைக்கிறது. இதன் மூலம் தினசரி 300 வாகனங்கள் வரை இரு நாடுகளுக்கும் இடையே பயணிக்க முடியும் என ரஷிய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 1946-ம் ஆண்டு வடகொரியாவின் நிறுவனரான கிம் இல் சுங்கை (தற்போதைய அதிபர் கிம் ஜாங் அன்னின் தாத்தா) படுகொலை முயற்சியில் இருந்து காப்பாற்றிய சோவியத் ராணுவ அதிகாரியான யாகோவ் நோவிசென்கோவின் நினைவாக இந்தப் பாலத்திற்கு அவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது.

98 சதவீத வர்த்தகம்

இந்தப் பாலத்தின் திறப்பு விழா வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்றது. இதில் ரஷிய பிரதமர் மிக்ஹைல் மிஷுஸ்டின் மற்றும் வடகொரிய பிரதமர் பாக் தே சோங் ஆகியோர் கலந்துகொண்டனர். வடகொரியா தனது 98 சதவீத வர்த்தகத்துக்கு சீனாவையே நம்பியிருக்கும் வேளையில், ரஷியாவுடன் தடையற்ற போக்குவரத்திற்காக இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளது. செயற்கைக்கோள் கண்காணிப்பில் இருந்து தப்பித்து, இரு நாடுகளுக்கும் இடையே ரகசியமாக ராணுவ தளவாடங்களை மாற்றிக்கொள்ள இந்தச் சாலைப் பாலம் பயன்படுத்தப்படலாம் என சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் தங்களது கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here