இந்தியாவின் முழுமையான ஆதரவை எதிர்பார்க்கிறோம் – ஜனாதிபதி!

0
30

இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஸ்ரீ ராஜ்நாத் சிங் மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (09) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்திக்கொள்ளும் நோக்கத்துடன் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் தற்போது இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதுடன், இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் உத்தியோகபூர்வமாக இந்நாட்டிற்கு வருகை தந்துள்ளமை 38 ஆண்டுகளுக்குப் பின்னர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் நிலவும் பாதுகாப்பு, பொருளாதாரம், சமுத்திர மற்றும் பிராந்திய பங்களிப்பு மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்றுத் தொடர்புகள் பரஸ்பர நன்மை கிடைக்கும் வகையில் மேலும் வலுப்படுத்தப்படுவது குறித்து இதன்போது ஜனாதிபதிக்கும் இந்தியப் பாதுகாப்பு அமைச்சருக்கும் இடையில் விரிவாக கலந்துரையாடப்பட்டன.

குறிப்பாக, இலங்கையில் போதைப்பொருள் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்துவதற்காக தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள தேசியத் திட்டம் குறித்து ஜனாதிபதி இங்கு விளக்கமளித்ததுடன், இந்து சமுத்திர பிராந்தியம் போதைப்பொருள் வர்த்தகங்களின் மையமாக மாறியுள்ளதால், போதைப்பொருட்களை ஒழிக்கும் நடவடிக்கைகளுக்கு இந்தியாவின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். மேலும், தற்போது இந்தியாவில் சிறை வைக்கப்பட்டுள்ள இலங்கை போதைப்பொருள் வர்த்தகர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு இந்தியாவின் முழுமையான ஒத்துழைப்பு கிடைக்கும் எனவும் ஜனாதிபதி நம்பிக்கை தெரிவித்தார்.

கடந்த காலங்களில் இலங்கை நெருக்கடிகளை எதிர்நோக்கிய ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இந்தியா வழங்கிய ஆதரவை ஜனாதிபதி இதன்போது விசேடமாகப் பாராட்டினார்.

இந்து சமுத்திர பிராந்தியத்தின் அமைதியைப் பாதுகாப்பதற்காக இலங்கையின் தொடர்ச்சியான ஆதரவு வழங்கப்படும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, தேசிய மற்றும் பிராந்தியத் தேவைகளுக்காக இலங்கை தனது முடிவுகளை எடுக்கும்போதும், ஒரு இறையாண்மையுள்ள நாடாக உலகின் பல்வேறு நாடுகளுடன் பல்வேறு ஒப்பந்தங்களில் இணைகின்றபோதும் பிராந்தியத்தின் பாதுகாப்பை கருத்திற்கொண்டே செயற்படுகின்றது என்றும் தெரிவித்தார்.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் மோதல்கள் ஏற்படாதவாறு அதனை அமைதியான பிராந்தியமாகப் பேணுவதற்கு இலங்கை வழங்கும் பங்களிப்பை, இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் இதன்போது விசேடமாகப் பாராட்டினார்.

மேலும், டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு இந்திய இராணுவம் வழங்கிய பங்களிப்பை இதன்போது குறிப்பாகப் பாராட்டிய ஜனாதிபதி, இலங்கைப் பாதுகாப்புப் படைகளின் திறன்களை மேம்படுத்துவதற்கும், இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும் இன்று கைச்சாத்திடப்பட்ட புதிய ஒப்பந்தங்கள் வழிவகுக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

“அயல்நாட்டிற்கு முதலிடம்” (Neighbourhood First) என்ற வெளிநாட்டுக் கொள்கையில் இலங்கை இந்தியாவுக்கு மிக முக்கியமானதாகும் எனத் தெரிவித்த இந்தியப் பாதுகாப்பு அமைச்சர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையின் கீழ் கடந்த இரண்டு ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் பாராட்டினார்.

மீனவர் பிரச்சினைகள் தொடர்பாகவும் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், இலங்கை மீனவர்களின் முக்கிய வாழ்வாதாரத்தைப் பாதுகாத்துக்கொள்வதற்கு இந்தியாவின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்வது குறித்தும், இப்பிரச்சினைகளைத் தீர்க்க இரு நாடுகளும் இணைந்து ஒத்துழைப்புடன் செயற்படுவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

பின்னர், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கான முக்கிய படியாக, கைச்சாத்திடப்பட்ட மூன்று புதிய ஒப்பந்தங்கள் ஜனாதிபதி மற்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் முன்னிலையில் பரிமாற்றிக்கொள்ளப்பட்டன.

இலங்கை விமானப் படைக்காக L70 துப்பாக்கிகளின் நவீனமயப்படுத்தல் ஒப்பந்தம், இந்தியாவின் தேசிய பாதுகாப்புக் கல்லூரிக்கும் இலங்கையின் தேசிய பாதுகாப்புக் கல்லூரிக்கும் இடையிலான கல்விசார் ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் மற்றும் இலங்கை மாணவர் படையணி மற்றும் இந்திய மாணவர் படையணி ஆகியவற்றுக்கு இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தம் ஆகிய மூன்று ஒப்பந்தங்களும் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோரால் இங்கு பரிமாற்றிக் கொள்ளப்பட்டன.

மேலும், இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் குருநாகல் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் அமைக்கப்பட்ட 03 பெய்லி பாலங்களைத் திறந்து வைக்கும் நிகழ்வில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஸ்ரீ ராஜ்நாத் சிங் ஆகியோர் இணைய வழி ஊடாக கலந்துகொண்டனர்.

டித்வா சூறாவளிக்குப் பின்னர் அத்தியாவசிய வீதிகளை மீளமைப்பதற்காக இந்தியாவினால் வழங்கப்பட்ட புனரமைப்பு உதவித் திட்டத்தின் ஒரு பகுதியாக, பன்சியகம – குருநாகல், கெபெல்லேவ – குருநாகல் மற்றும் பழுகாமம் – மட்டக்களப்பு ஆகிய பாதைகளில் நிர்மாணிக்கப்பட்ட பெய்லி பாலங்கள் இவ்வாறு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டன.

பாதுகாப்புப் பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, பாதுகாப்பு அமைச்சின் பதில் செயலாளர் இந்திகா விஜேகுணவர்தன ஆகியோருடன், இந்திய விமானப்படையின் துணை பதவிநிலைப் பிரதானி எயார் மார்ஷல் Ashutosha Dixit, கடற்படை துணை பதவிநிலைப் பிரதானி வைஸ் அட்மிரல் Ajay Kochhar, இராணுவ துணை பதவிநிலைப் பிரதானி லெப்டினன்ட் ஜெனரல் Sandeep Jain, பாதுகாப்பு அமைச்சின் இணைச் செயலாளர் Prasanna Shrivastava உட்பட இந்திய பாதுகாப்பு மற்றும்
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் அடங்கிய உயர்மட்டக் குழுவினரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here