வன்னியில் கைவிடப்பட்ட காணிகளை மீள உரியவர்களுக்கு கையளிக்காமை தொடர்பில் விளக்கமளிக்குமாறு உயர் நீதிமன்றம், சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.
யுத்தம் நடைபெற்றபோது வன்னி மாவட்டத்தில் மக்கள் தங்களது காணிகளை விட்டு வெளியேறிச் சென்றுள்ளனர்.
யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் குறித்த மக்கள் தமது இருப்பிடங்களுக்கு சென்ற போது அந்த பகுதிகளை வேற்றவர்கள் கைப்பற்றியிருந்தனர்.
இது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களால் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின்போது சம்பந்தப் பட்ட காணிகளை மீண்டும் உரியவர்களுக்கு பெற்றுக் கொடுப்பதாக காணி ஆணையாளர் 2013 ம் ஆண்டு வாக்குறுதியொன்றை வழங்கினார்.
அதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் வழக்கை முடிவுக்கு கொண்டுவர தீர்மானித்து.
எனினும் பல வருடங்கள் கடந்துள்ள போதிலும் காணி ஆணையாளர் வழங்கிய வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்று மனுதாரர்கள் நேற்றைய தினம் நிதிமன்றத்தில் மீண்டும் முறைப்பாடொன்றை முன்வைத்தனர்.
அதனை ஆராய்ந்த பிரதம நீதியரசர் ஸ்ரீபவன் உட்பட மூவர் அடங்கிய நீதியரசர்களின் குழு, காணிகளை மனுதாரர்களுக்கு பெற்றுக் கொடுக்க தவறியமை தொடர்பாக எதிர் வரும் ஜுலை மாதம் 26 ம் திகதி விளக்கமளிக்குமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.