ஜெயலலிதா வழக்கு: வருமானத்திற்கு மீறி சொத்து சேர்ப்பது குற்றமல்ல – உச்சநீதிமன்றம் பரபரப்பு கருத்து!

0
230

கர்நாடக – ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், கர்நாடக அரசின் சிறப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யாவின் வாதத்திற்குப் பின்னர் கருத்து தெரிவித்த நீதிபதிகள், வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்து சேர்ப்பது குற்றமல்ல என்றும், பணம் வரும் வழி தவறாக இருந்தால் மட்டுமே அது குற்றம் என்றும் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில், முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் விடுதலைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் மீது, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று இறுதி வாதம் தொடங்கியது.

முதலில் கர்நாடக அரசு சிறப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா தனது வாதத்தை முன்வைத்தார். அப்போது, வழக்கின் முக்கிய அம்சங்களை சுருக்கமாக விவரித்து ஆச்சார்யா வாதிட்டார்.

அவரது வாதத்திற்குப் பின்னர் கருத்து தெரிவித்த நீதிபதிகள், “வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்து சேர்ப்பது எப்படி குற்றமாகும். அது குற்றமல்ல. வருகிற வருமானம் சட்டத்திற்குப் புறம்பான வகையில் இருந்தால்தான் அது குற்றம்.

மேலும் இந்த சொத்துக்களை வாங்க பயன்படுத்தப்பட்ட பணம் ஜெயலலிதாவுடையது என்று நிரூபிக்க முடியுமா? அதற்கு என்ன ஆதாரம் உள்ளது?” என்று கேட்டனர். இதன்பிறகு வாதத்தில் சில சந்தேகங்களை நீதிபதிகள் எழுப்பினர்.

குறிப்பாக, “ஜெயலலிதாவுக்கு லாபம் சம்பாதிக்கும் நோக்கத்தில் சசிகலா பினாமி நிறுவனங்களை நடத்தியதாக கூறியுள்ளீர்கள்.

ஆனால் அந்த பணம் ஜெயலலிதாவுக்கு உரியது என்பதற்கு ஆதாரம் என்ன? ஜெயலலிதா வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் கணித தவறு காரணமாக அதை தவறவிட்டு விட்டதாகவும் வாதிட்டீர்கள்.

வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக கூறும் நீங்கள், அது சட்ட விரோதமான வகைகளில் சேர்க்கப்பட்ட பணமா என்பதற்கு ஆதாரத்தை சமர்ப்பிக்க முடியுமா? ” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து, நிறுவனங்களின் வழக்கு விசாரணையை ஜூன் 7 ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்.

அன்றைய தினம் நிறுவனங்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கில், கர்நாடக அரசு தரப்பு தனது வாதத்தை முன்வைக்க உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here