ஊவா மாகாணத்தில் உள்ள தமிழ் மகளிர் பாடசாலை ஒன்றின் பெண் அதிபரை ஊவா மாகாண முதலமைச்சர் மண்டியிட வைத்த சம்பவத்திற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரசும், மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சும் வன்மையாக கண்டிப்பதாக மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் மருதபாண்டி ரமேஷ்வரன் தெரிவித்தார்.
அட்டனில் 22.01.2018 அன்று இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு எமது ஊடகவியலாரை சந்தித்த போது, அவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்களாக வாழலாம். ஆனால் நாம் யாரிடமும் மண்டியிட தேவையில்லை. யாரிடமும் எதையும் கெஞ்சி கேட்பதற்கும் தயாராக இல்லை. எமது உரிமைகளை நாம் தட்டிக் கேட்டே பெற்றிருக்கின்றோம்.
குறித்த பெண் அதிபர் ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமானிடம் முறையிட்டிருந்தால் அன்றே இதற்கு தகுந்த நடவடிக்கையை எடுத்திருப்போம். இருந்தாலும், பரவாயில்லை இவ்வாறான செயல்களை வன்மையாக கண்டிக்கின்றோம்.
ஊவா மாகாண முதலமைச்சருக்கு எதிராக நாங்களும் இன்று போர்க்கொடி தூக்கியுள்ளோம். ஏனென்றால் இவ்வாறான ஒரு அதிபரை இழிவுப்படுத்தி வழி நடத்துகின்ற பொழுது அதிபர்களுக்கு சுதந்திரமாக செயலாற்ற முடியாது.
மத்திய மாகாணத்தை பொருத்தவரையில் தமிழ் பாடசாலைகளில் இருக்கின்ற எந்தவொரு தமிழ் அதிபர்களையும் முதலமைச்சருக்கு கீழ் அடிப்பணிய வைப்பதில்லை. தமிழ் கல்வி தொடர்பில் மத்திய மாகாண முதலமைச்சர் முழு அதிகாரத்தையும் எங்களிடம் தந்துள்ளார்.
நாங்கள் எந்தவொரு அதிபர்களையும், கல்வி அதிகாரிகளையும், ஆசிரியர்களையும் அரசியல் ரீதியாக பழிவாங்குவதில்லை. பாடசாலைகளை நல்ல முறையில் வழிநடத்துவதற்கு அவர்களுக்கு நாங்கள் முழு சுதந்திரத்தையும் கொடுத்துள்ளோம். எங்களது நோக்கம் கல்வியில் வளர்ச்சி அடைய வேண்டும் என்றார்.
(க.கிஷாந்தன்)