நூற்றுக்கணக்கான ஆசிரியர்களைக் கொண்ட ஒரே மலையகத் தோட்டம் ராகலை நடுக்கணக்கு.
அங்கு ஆசிரியர் ஒருவரையே அரசியல் பிரதிநிதியாக்குவோம் – திலகராஜ் எம்.பிமலையகப் பகுதிகளில் தோட்டத் தொழிலாளர்களுக்கு அடுத்தபடியாக தொழில்துறை அடிப்படையில் ஆசிரியர்களே திரட்சியாக வாழ்கின்றனர். அநேகமாக ஒவ்வொரு தோட்டத்திலும் தொழிலாளர் எண்ணிக்கையே அதிகமாக இருக்கும்.
எனினும் விதிவிலக்காக தோட்டத் தொழிலாளர்கள் இருநூறு அளவில் உள்ள தோட்டம் ஒன்றில் அதன் இருமடங்கு அளவில் ஆசிரியர்களைக் கொண்டுள்ள பகுதியாக ராகலை நடுக்கணக்கு (சென்.லியனாட்ஸ்) அமைந்துள்ளது. எனவே அங்கிருந்து ஆசிரியர் ஒருவரே அரசியல் பிரதிநிதியாக தெரிவது பொருத்தமானதாகும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.
வலப்பனை பிரதேச சபைக்கு உட்பட்ட ராகலை , சென்.லெனாட்ஸ் வட்டாரத்தில் போட்டியிடும் ஆசிரியர் செல்வநாதன் ரோய் பிரதீபனை ஆதரித்து இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தின் போதே மேற்படி கருத்தினைத் தெரிவித்தார்.
மலையக சமூகம் தொழிலாளர் சமூகம் என்ற நிலையில் இருந்து மாற்றம் பெற்று கல்விச் சமூகமாக மாற்றம் பெற்று வருகின்றது என்பதற்கான அடையாளமாக திகழ்வது ராகலை சென்.லியானட்ஸ் தோட்டமே. ஒரு தோட்டத்தில் நானூறுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் அரச ஊழியர்கள் வாழ்கிறார்கள் என்பது மலையக மக்களுக்கு கிடைக்கின்ற கௌரவமாகும்.
பெரும்பாலும் இடதுசாரி, முற்போக்கு சிந்தனையாளர்களைக் கொண்ட இந்த மண்ணில் இருந்து பல கல்வியாளர்கள், துறைசார்ந்தவர்கள் உருவாகியிருக்கிறார்கள். ஈரோஸ் அமைப்பு ஜனநாயக வழியில் அரசியல் செயற்பாட்டில் இருந்த 90களில் தனக்கு கிடைத்த தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியொன்றை ராகலை நடுக்கணக்கைச் சேரந்த ஆசிரியர் ராமலிங்கம் என்பவருக்கே வழங்கியிருந்தது.
கல்விசார்ந்து புகழ்பெற்ற இந்த மண் ஆசிரியர்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது.
எனவே, இந்த மண்ணில் ஆசிரியர் ஒருவருக்கு அரசியல் பிரதிநிதித்துவ வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்கின்றதன் அடிப்படையில் ஆசிரியரும் சமூக சேவையாளருமான செல்வநாதன் ரோய் பிரதிபன் வட்டார வேட்பாளராக களமிறக்கபட்டுள்ளார். கட்சிகள், கொள்கைகள் என்பவற்றை புறமொதுக்கி இன்று தமது வட்டாரத்தில் ஆசிரியர் ஒருவரை அரசியல் பிரதிநிதியாக கொண்டுவர வேண்டும் எனும் அடிப்படையில் அனைத்து அரசியல் தரப்பினரும் ஒன்று திரண்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
பெருந்தேசிய கட்சிகள் நமது மக்களின் வாக்குகளை பயன்படுத்த எண்ணினால் நாம் அவர்களின் சின்னத்தைப் பயன்படுத்தி அவற்றை நமக்கு சாதகமாக்கிக் கொள்ள வேண்டும். நமது தனித்துவத்தைப் பேணிக்கொண்டே தேர்தல் வியூகத்தில் வெற்றியடைய வேண்டும்.
எனது அரசியல் பயணத்தில் இந்த உத்தியையே நான் கையாள்கிறேன். யாரும் எப்படியம் விமர்சிக்கலாம். நாம் எந்த இலக்கோடு செயற்படுகின்றோம் என்பதே முக்கியம். கடந்த பாராளுமன்ற தேர்தலில் சின்னம் பற்றிய தயக்கத்தை தள்ளிவைத்துவிட்டு நான் களமிறங்கியதால் இன்று பிரதேச சபைச்சட்டத்திருத்தம் உள்ளிட்ட பிரதேச சபை அதிகரிப்பு, பிரதேச செயலக அதிகரிப்பு போன்ற உரிமை சார் விடயங்களை பாராளுமன்றில் முன்வைத்து தீர்வு காண முடிகின்றது. இல்லாத பட்சத்தில் நாம் வெறுமனே ஊடகங்களில் பேசிக்கொண்டிருக்கின்ற விடயமாகவே அது அமைந்துவிட்டிருந்தன.
பாராளுமன்றத்திற்கு மாத்திரமல்ல, மாகாணசபை, உள்ளூராட்சி சபை என அனைத்து சபைகளிலும் மலையகத்தில் படித்தவர்களின் பிரதிநிதித்துவம் அமைய வேண்டும். அப்போதுதான் ஆராக்கியமான சூழலுக்கு நமது அரசியலைக் கொண்டு செல்ல முடியும்.
இந்த பின்னணியில்தான் வலப்பனை பிரதேச சபைக்கு பொருத்தமான வட்டாரத்தில் பொருத்தமான வேட்பாளராக ஆசிரியர் ரோய் களமிறங்கியுள்ளார். எதிர்வரும் 25, 26 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு இடம்டபெறவுள்ள நிலையில் அதிகளவான ஆசிரியர்கள் வாழும் இந்த வட்டாரத்தில் தபால் மூல வாக்குகளை ஆசிரியர் ரோய்க்கு வழங்கி அவரது வெற்றிப்பயணத்தை ஆரம்பித்து வைக்குமாறு வட்டாரத்தில் வாழும் அனைத்து அரசாங்க ஊழியர்களையும் கேட்டுக்கொள்கின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.