ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களித்தால் ஊழல்வாதிகள் பலமடைவர். ஊழலற்ற அரசை அமைக்க என்னை பலப்படுத்துங்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அவரே அவ்வாறு தெரிவிக்கும் போது, ஊலற்ற ஒரு தலைவரின் ஊடாக மக்கள் நலன் கருதி சேவை செய்ய சேவல் சின்னத்திற்கு ஆதரிக்க மக்கள் முன்வர வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் கொட்டகலை பிரதேச சபைக்கு இ.தொ.கா வின் “சேவல்” சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து 04.02.2018 அன்று பத்தனை பொரஸ்கிறிக் தோட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தலவாக்கலையில் இடம்பெற்ற கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்திருந்தார். மலையகத்தில் போதை பொருட்கள் அதிகமாக காணப்படுகின்றது என சின்ன கல் ஒன்றை போட்டார். தற்பொழுது மனம் உறுத்தியவர்கள் கல்லுக்கு சொந்தகாரர்களாகிவிட்டனர்.
ஊவாவில் தமிழ் கல்வி அமைச்சை செந்தில் தொண்டமானுக்கு வழங்கியதுக்கு அட்டனில் போரடி என்ன பயன். சரியாக இருந்தால் ஊவாவில் பேராட்ட வேண்டும். இன்று மக்களிடமிருந்து அனுதாப வாக்குகளை பெறுவதற்காகவே இவ்வாறான செயல்களில் ஈடுப்படுகின்றனர்.
அக்காலத்தில் பஞ்சம் ஏற்பட்டதோடு, வன்செயல்களும் இடம்பெற்றன. அப்போது எமது மக்களுக்காக ஒரு பாதுகாப்பாக வலயமாக காங்கிரஸ் விளங்கியது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 75 வருட காலமாக சமூகத்தை கட்டி காத்துள்ளது.
மூன்று வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற தேர்தல் ஒன்றில் யாரோ ஒருவன் சொன்னான் என்று கேட்டு மாற்றம் கொண்டு வர வேண்டும் என வாக்களித்தீர்கள். ஆனால் மாற்றம் இப்பொழுது மாறியுள்ளது.
யாரோ பெற்ற பிள்ளைக்கு பெயர் வைக்கும் சில அரசியல் தலைவர்கள் வாய் திறந்து பேசுவதற்கு உரிமையை பெற்றுக்கொடுத்தது காங்கிரஸ் தான். அதனை மறந்து பேசுகின்ற தலைவர்களால் இன்று மலையகத்தை மாற்றியமைக்க முடியாது.
இலங்கை தொழிலாளர் என்பது கடந்த காலங்களில் சொந்த சின்னத்திலிலேயே போட்டியிட்டு வெற்றிப்பெற்றதை யாரும் மறக்க முடியாது. இன்று மலையக மக்கள் மனதில் சேவல் சின்னம் அழிக்க முடியாத சின்னமாக இருக்கின்றது. ஸ்தாபகத்தின் சின்னம் சேவல். சேவலுக்கு சொந்தகாரன் நான்.
ஆகவே இந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் சேவல் சின்னத்தை வெற்றிப்பெற செய்து ஒரு மாற்றத்தினை ஏற்படுத்துங்கள் என்றார்.
(க.கிஷாந்தன்)