கெர்கஸ்வோல்ட் பிரஜாசக்தி நிலையம் முன்னாள் அமைச்சரின் காலத்திலேயே மூடப்பட்டது.
பிராஜாசக்தி நிர்வாக பிரிவு
பொகவந்தலாவை பிரதேசத்தில் கெர்கஸ்வோல்ட் தோட்டத்தில் அமைந்துள்ள பிரஜாசக்திசக்தி நிலையமானது முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் நிர்வாக காலப்பகுதியில் அவராலேயே மூடப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கெர்கஸ்வோல்ட் பிரஜாசக்தி நிலையம் மூடப்பட்டது தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிராஜாசக்தி நிலையங்கள் உருவாக்கிய காலத்தில் பொகவந்தலாவை பிரதேசத்தில் ஒரேயொரு நிலையமாக கெர்கஸ்வோல்ட் பிரஜாசக்தி நிலையம் 25.06.2006 அன்று ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் தோட்ட காரியாலய அருகாமையில் தோட்ட நிர்வாகத்திற்கு பொறுப்பான கட்டிடத்தில் இயங்கி வந்ததோடு 05.11.2007ம் ஆண்டு வேறொரு இடத்தில் புதிதாக கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது. 2010ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 24ம் திகதி நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த பெயர்பலகை இனந்தெரியாதவர்களினால் சேதமாக்கப்பட்டிருந்தமையடுத்து முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்மான் நேரடியாகவே நிலையத்திற்கு வருகை தந்து நிலையத்தில் உள்ள அனைத்து பொருட்களையும் மற்றொரு நிலையத்திற்கு அனுப்புமாறு கூறி நிலையத்தினை மூடுமாறு பணித்தார். இதன்பின்னர் அங்குள்ள இளைஞர்கள் தோட்ட பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் நிலையத்தினை திறப்பதற்கான நடவடிக்கையினை அவருடைய ஆட்சி காலத்தில் முன்னாள் அமைச்சர் முன்னெடுக்கவில்லை. ஆகக்குறைந்தது குறித்த கட்டிடத்தையாவது உரிய முறையில் பாவணை செய்து பொது பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டிருக்கவில்லை.
2015ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சுக்கு கீழாக பிராஜாசக்தி நிலையத்தின் நிர்வாகம் கொண்டுவரப்பட்டதையடுத்து அதனை சீர் செய்வதற்கான மதிப்பீட்டினை கோரியது. அதற்கான மதிப்பீட்டு தொகை 20 லட்ச ரூபாவாகும். ஏற்கனவே இருந்த நிலையங்களை நடாத்தி செல்வதற்கு நிதியொதுக்கீடு செய்யப்பட்டதே தவிர இந்நிலையத்தினை புனரமைப்பதற்கும், புதிய நிலையங்களை நிர்மாணிப்பதற்குமான நிதி அரசாங்கத்தினால் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. எனவே குறித்த நிலையத்தினை மீள புனரமைப்பதற்கு நிதி கோரப்பட்டுள்ளது. அதேநேரம் இந்த இரண்டரை வருட காலப்பகுதியில் இந்த நிலையத்தினை புனரமைத்து தரவேண்டும் என்றோ, நிலையத்தினை திறப்பதற்கான நடவடிக்கையினை எடுக்கவேண்டும் என்றோ ஒரு கோரிக்கையேனும் அமைச்சரிடமும், திட்ட முகாமையாளரிடமும், திட்ட இணைப்பாளர்களிடமும் கிடைக்கப்பெறவில்லை.
தேர்தல் களம் நிறைவடைந்துள்ள நிலையில் செய்தி வரட்சிக்காக இன்றைய நல்லாட்சி அரசாங்கத்தில் உள்ள மலையக அமைச்சர்கள்மீது சேருபூச வேண்டுமென்றே பொய்யான செய்திகளை வழங்கி வருகின்றனர். இத்தனை சமூக அக்கறை உள்ளவர்கள் முன்னாள் அமைச்சரிடம் பேசி இந்த நிலையத்தினை திறப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று பல பாடசாலை மாணவர்களுக்கு பயன் கிடைத்திருக்கும். அதைவிடுத்து தற்போது நீலிக்கண்ணீர் வடிப்பது கேளிக்கைக்குரியது.