ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்கவினால் முழந்தாழிட நிர்பந்திக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் பதுளை மாவட்ட தமிழ் மகளிர் பாடசாலை அதிபர் ஆர்.பவானிக்கு, கடிதம் மூலம் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (16), பாடசாலை முகவரிக்கு அனுப்பட்ட கடிதம் ஒன்றின் ஊடாக, தனக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக, அதிபர் ஆர்.பாவனி, தெரிவித்துள்ளார். அந்தக் கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில், அதிபர் கூறியதாவது,
“தானாக முன்வந்து, நீ மண்டியிட்டுவிட்டு, ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க, உன்னை மண்டியிட வைத்தார் என நீ குற்றம் சுமத்தியிருக்கிறாய்.
“மே மாதம் நடைபெறும் வழக்கு விசாரணைக்குச் செல்லும் வரையில், நீ உயிரோடிருக்கப் போவதில்லை. அதுவரையில் உனக்கு விரும்பியவற்றை சாப்பிட்டுக்கொள். உன்னை முடமாக்கி, சக்கரக் கதிரையில் உன் வாழ்நாளைக் கழிக்கச் செய்துவிடுவோம். சாமரவின் (ஊவா முதல்வர்) பின்னணி தெரியாமல் விளையாடாதே, தலையில்லா முண்டமாகக் கண்டுப்பிடிக்கப்படுவாய்…”
“இப்படியான தகாத வார்த்தைகளால், எனக்கு கடிதம் ஊடாக உயிரச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நான், இன்று (20), பதுளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றைப் பதிவுசெய்ய உள்ளேன்” என்றார்.
மேற்படி முதலமைச்சருக்கு எதிரான வழக்கு விசாரணை தொடர்பில், உங்களுக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றதா? என்று வினவியமைக்கு, “ஆம், தொடர்ந்து பல்வேறு தரப்பில் இருந்தும் முதலமைச்சருக்கு எதிரான வழக்கு விசாரணையைச் சமரசம் செய்ய வேண்டும் என்று அழுத்தங்கல் கொடுக்கப்பட்டு வருகின்றன. எனக்கும் எனது குடும்பத்தாரதும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்” எனவும், அவர் வேண்டுகோள் விடுத்தார்.
மாணவி ஒருவரை, பாடசாலையில் அனுமதிக்காமை தொடர்பில், ஊவா மாகாண சபை கல்வி அமைச்சின் செயலாளரது உத்தரவுக்கமைய, முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்துக்குச் சென்ற பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய பெண் அதிபரை மண்டியிடச் செய்த குற்றச்சாட்டு தொடர்பில், ஊவா மாகாண முதல்வர் சாமர சம்பத் தஸநாயக்க கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்படத்தக்கது.