அக்கரப்பத்தனை டொரிங்டன் தோட்ட அதிகாரியை இடமாற்றம் செய்யுமாறு கோரி பணிபகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டவாறு இரண்டாவது நாளாகவும் 31.03.2018 அன்று தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.இதில் 500ற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் தோட்டத்தில் உள்ள முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு முன்பாக கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டனர்
இத்தோட்டத்தில் உள்ள தொழிலாளி ஒருவரை கடந்த மாதம் தோட்ட நிர்வாகம் வேலை நிறுத்தம் செய்தது. இவருக்கு தோட்ட அதிகாரி தொழில் தருவதாக பல முறை கூறி ஏமாற்றியதன் காரணமாகவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன் உடனடியாக குறித்த தொழிலாளிக்கு தொழில் வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். அத்தோடு தோட்ட அதிகாரியின் கொடும்பாவியும் ஆர்பாட்டகார்களால் எரியூட்டப்பட்டது.
இதேவேளை 30.03.2018 அன்று குறித்த தொழிலாளி மண்னெண்ணையை ஊற்றி தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். எனினும் ஏனைய தொழிலாளர்கள் அவரை காப்பாற்றியுள்ளனர்.
30.03.2018 அன்று இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக மக்களை சந்திக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், பொது செயலாளரும், நுவெரலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் சென்று மக்களிடம் இது தொடர்பாக கேட்டு, தொழிற்சங்கத்திற்கு சொன்னீர்களா என வினவிய பொழுது, அதற்கு தொழிலாளர்கள் ஆம் கூறியுள்ளோம், தொழிலாளர் தேசிய சங்கத்திற்கு அறிவித்துள்ளதாகவும் தொழிலாளர்கள் தெரிவித்ததையடுத்து, இதற்கு தொண்டமான் இப்பிரச்சனையை எனக்கு பேசமுடியாது. இ.தொ.கா தொழிற்சங்க அங்கத்தவர்களுக்கு மாத்திரம் பேசமுடியும் என தெரிவித்ததாகவும், இதன்போது அங்கிருந்த கண் பார்வையற்ற ஒருவர் சேர் நீங்கள் அப்படி சொல்ல முடியாது என்று கூறிய பொழுது தன்னை தரம்குறைவாக பேசியதுடன் தாக்கியதாகவும், இது தொடர்பாக அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளதாக 31.03.2018 அன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது தொழிலாளர்கள் தெரிவித்தார்.
31.03.2018 அன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் கலந்துகொண்டு, ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற போது மக்கள் மத்தியில் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.
மக்களுக்கு பிரச்சினை ஏற்படும் பொழுது நாங்கள் கட்சி பார்த்து செயல்படுவதில்லை. எங்களுடைய மக்களை தாக்குபவர்களை தான் நாங்கள் தலைவர்களாக வைத்திருக்கின்றோம். எனவே இதனை மக்கள் சிந்தித்து செயல்பட வேண்டும்.
அத்தோடு குறித்த தோட்ட அதிகாரியை இடமாற்றம் செய்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். எதிர்வரும் திங்கட்கிழமை அட்டனில் உள்ள தொழில் திணைக்களத்தில் இது சம்மந்தமாக பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்மானத்தை பெற்றுக்கொடுப்போம் என அவர் இதன்போது கருத்து தெரிவித்தார்.
(க.கிஷாந்தன்)