மலையகத் தமிழ் மக்கள் இந்து சமய சிறுதெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவதன் ஊடாக தமது தெய்வ நம்பிக்கையைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றமை பாராட்டத்தக்கவிடயமாகும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதிநிதிச்செயலாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து 31.03.2018 கொட்டகலை யுலிபீல்ட் தோட்ட மதுரை வீரன் கோவிலுக்குக் குடிநீர் தாங்கி வழங்கி வைக்கும் நிகழ்விலும் கிறிஸ்டல்பார்ம் தோட்ட கங்கையம்மன் கோவிலில் இடம் பெற்ற அன்னதான பூஜையிலும் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் யுலிபீல்ட் வட்டார கொட்டகலை பிரதேச சபை உறுப்பினர் நாகேந்திரனின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் தோட்டத்தலைவர் திருச்செல்வம் , பிரதேச தொழிற்சங்க அமைப்பாளர் மனோகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சோ.ஸ்ரீதரன் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது :
மலையகத்தில் தோட்டங்கள் தோறும் இந்து சமய பிரதான தெய்வங்களுக்கு கோவில்கள் உள்ளன. இந்தக் கோவில்கள் ஊடாக பல்வேறு சமய நிகழ்வுகள் இடம் பெறுகின்றன. இதற்கு அப்பால் தோட்டப்பகுதிகளில் காவல் தெய்வங்களாக கருதப்படுகின்ற சிறுதெய்வங்களுக்கும் கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தக் கோவில்களிலும் தொழிலாளர்கள் முக்கிய வழிபாடுகளில் ஈடுபட்டு வருவதன் ஊடாக தமது சிறுதெய்வ வழிபாட்டின் முக்கியத்துவத்தைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர். இந்து சமயத்தின் வளர்ச்சிக்கும் நாம் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றோம்.
இந்த நிலையில் கடந்த உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் யுலிபீல்ட் வட்டாரத்தை வெற்றி கொண்ட தமிழ் முற்போக்குக் கூட்டணி எதிர்காலத்தில் இந்தப்பிரதேசத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்