பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு முடிவுற்றவுடன் ஐக்கியதேசியக்கட்சியில் உடனடியாக மறுசீரமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கியதேசியக்கட்சியின் பாராளுமன்றக் குழுக்கூட்டத்தில் தெரிவித்திருக்கின்றார்.அத்துடன் கட்சியின் பொறுப்புகளை புதிய அணியொன்றிடம் சமர்ப்பித்து கட்சியை முழுமையாக மறுசீரமைத்து அடுத்துவரும் மாகாணசபை மற்றும் ஏனைய தேர்தல்களில் பலமுடைய கட்சியாக போட்டியிடப்போவதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று நடைபெற்ற ஐக்கிய தேசியக்கட்சியின் விசேட பாராளுமன்றக் குழுக்கூட்டத்தில் இதனைக்குறிப்பிட்டிருக்கின்றார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்
நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் நிறைவடைந்ததுமே ஐக்கிய தேசியக்கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும். கட்சியின் பொறுப்புக்களை புதிய அணியொன்றிடம் சமர்ப்பித்து தேவையான மாற்றங்களை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
எதிர்வரும் மாகாணசபை தேர்தல் மற்றும் ஏனைய தேர்தல்களில் பலமாக கட்சியாக போட்டியிட நடவடிக்கை எடுக்கப்படும். ருவன் விஜயவர்த்தன குழுவின் பரிந்துரைகள் மற்றும் ஏனைய யோசனைகள் தொடர்பாக விரிவாக ஆராய்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
கட்சியின் புதிய பதவிகளுக்கான நியமனம் தொடர்பில் எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் செயற்குழுவில் தீர்மானம் எடுக்கப்படும். இதற்காக கட்சியின் சிரேஷ்ட தலைவர்களிடம் ஆலோசனை பெறப்படும். அந்தவகையில் எதிர்வரும் 7 மற்றும் 8ஆம்
திகதிகளில் ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழுக்கூட்டமும் விசேட பாராளுமன்றக்குழுக்கூட்டமும் நடைபெறவுள்ளது.
இந்த கூட்டங்களில் கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பான இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் அத்துடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை ஆராய குழுவும் நியமிக்கப்படும். இதற்காக கட்சியின் தவிசாளர் பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். அதன்பின்னர் அது குறித்து பாராளுமன்றக்குழுவிற்கு அறிவிக்கப்படும் என்றார்.