பழிவாங்கும் அரசியலுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் துணை போகாது. இதற்கமையவே நாங்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவல்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிரணியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பின் போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை.
இது தொடர்பாக கொட்டகலையில் 05.04.2018 அன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின் எமது ஊடகவியலாளர் நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக கேட்ட பொழுது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இதேபோன்று ஏற்கனவே அமைச்சர் ரவி கருணாநாயக்க மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையின் போதும் இந்த நிலைப்பாட்டே தான் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கடைபிடித்தது.
இது மக்களின் தீர்ப்பு. எனவே மக்களின் தீர்ப்பே இறுதியானது. இது தொடர்பாக நாங்கள் சொல்வதற்கு என்ன இருக்கு என தெரிவித்தார்.
(க.கிஷாந்தன்)