நுவரெலியா மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட கொட்டகலை பிரதேச சபையின் முதலாவது சபை அமர்வு அதன் தலைவர் ராஜமணி பிரசாத் தலைமையில் 25.04.2018 அன்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது.கொட்டகலை பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்த சபை அமர்வில் இப் பிரதேச சபைக்கு நியமனமான ஒரே ஒரு சிங்கள பெண் உறுப்பினர் உட்பட 15 பேர் கலந்து கொண்டனர். அத்தோடு பிரதேச சபையின் செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்ட இந்த அமர்வில் உறுப்பினர்கள் தமது கன்னி உரைகளை நிகழ்த்தினார்கள்.
இதன்போது முதலாவது சபை அமர்வில் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் அபிவிருத்திகளை முன்னெடுக்கும் நோக்கில் குழுக்கள் அமைக்கப்பட்டது. இந்த குழுக்களில் நிதி மற்றும் கொள்கை திட்டமிடல், வீடமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி, தொழில்நுட்பம், சுற்றாடல் மற்றும் சுகாதாரம் ஆகிய பிரிவுகளுக்கான குழுக்கள் நியமிக்கப்பட்டது.
அத்தோடு பிரதேச சபைக்கான கொடியும், இலட்சினையும் அறிமுகம் செய்யப்பட்டது. இது இவ்வாறிருக்க முதலாவது சபை அமர்வில் நியமிக்கப்பட்டுள்ள குழுக்களுக்கான உறுப்பினர்களின் பெயர்களை சபையில் தீர்மானிக்காது தனிப்பட்ட ரீதியில் தலைவர் ஊடாகவே தீர்மானிக்கப்பட்டதாக ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் ஒருவர் இந்த நடவடிக்கைக்கு தனது எதிர்ப்பினை தெரிவித்தார்.
அத்தோடு எதிர்வரும் சபையில் இதற்கான காரணத்தை அறிவிக்குமாறும் கூறினார். அதேசமயத்தில் இதை செவிமடுத்த தலைவர் தனக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில் பெயர்களை நியமித்ததாகவும், உறுப்பினர் முன்வைத்த எதிர்ப்பினை ஏற்று மீள் பரிசீலனை செய்வதாகவும் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட சபை நடவடிக்கையில் பல்வேறு செயற்திட்டங்கள் தொடர்பாக கருத்துகள் தலைவரால் முன்வைக்கப்பட்டது. அதற்கமைவாக கொட்டகலை பிரதேச சபையின் எல்லை பகுதியில் நகர், கிராம மற்றும் தோட்டப்பகுதி மக்கள் பிரயோசனம் படும் வகையில் பொது மலர்ச்சாலை ஒன்று பிரதேச சபையின் ஊடாக அமைக்கப்படும் என தெரிவித்தார்.
இவ்வாறு அமைக்கப்படும் பொதுவான மலர்ச்சாலையில் இறுதி கிரியை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு பிரதேச சபையின் அனுமதியை பெறுவதுடன், வரியும் செலுத்தப்பட வேண்டும் என அவர் அறிவித்தார்.
அதேவேளையில் அக்கரப்பத்தனை, நுவரெலியா பிரதேசங்களிலிருந்து தினமும் சேகரிக்கப்படுகின்ற கழிவு திண்மங்கள் கொட்டகலை பிரதேச சபை எல்லைப்பகுதியில் கொட்டப்பட்டு வருவதாகவும், புதிய பிரதேச சபை உருவாக்கத்தின் பின் இந்த நடவடிக்கைகயை முன்னெடுக்கும் நுவரெலியா மற்றும் அக்கரப்பத்தனை பிரதேச சபைகள் கொட்டகலை பிரதேச சபையின் அனுமதியை பெற்று அதற்கான வரியை அறவிட்டதன் பின்பே குப்பைகளை கொட்ட அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இது இவ்வாறிருக்க கொட்டகலை பிரதேச சபை எல்லைப்பகுதிக்குள் கடந்த காலங்களில் இடப்பட்டுள்ள அரசியல் கட்சிகள் மற்றும் தனியார் கம்பனிகளின் விளம்பர பலகைகள் எதிர்வரும் 7 நாட்களுக்குள் அகற்றப்பட்டு பிரதேச சபை தீர்மானிக்கும் இடத்தில் மாத்திரமே விளம்பர பலகைகளை பொருத்தி காட்சிப்படுத்த திட்டங்கள் வகுக்கவுள்ளதாகவும், பிரதேச சபை நியமிக்கும் இடத்தில் விளம்பர பலகைகளை பொருத்த அரசியல் கட்சிகள் மற்றும் தனியார் கம்பனிகள் சபையின் அனுமதியை பெறுவதோடு, வரியும் செலுப்பட வேண்டும் என இதன்போது அவர் தெரிவித்தார்.
அடுத்த சபை அமர்வு அடுத்த மாதம் நடுப்பகுதிக்கு முன்பாக இடம்பெறும் எனவும் அதற்கான திகதி அறிவிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
(க.கிஷாந்தன்)