நாட்டின் பல மாகாணங்களின் பல்வேறு இடங்களில் பிற்பகல் 2 மணியின் பின்னர் கடும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதேவேளை கிழக்கு, வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் ஹம்பாந்தொட்டை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இன்றையதினம் கடும் வெப்பமான காலநிலை நிலவும் என்று தெரிவிக்கப்படுகிறது.
வளிமண்டலவியல் திணைக்களம் நேற்று விடுத்திருந்த ஊடக அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டிருந்தது.
பொலனறுவை, அனுராதபுரம், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக வெப்பமான காலநிலை நிலவும் போது, சிறார்கள் குறித்து அதிக அவதானம் செலுத்துமாறு வைத்திய நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
வெப்பமான காலநிலையின் காரணமாக சிறுவர்களே அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.
அவர்கள் வெளியில் ஓடியாடி விளையாடுவதால் அதிக வியர்வையை வெளியேற்றுகின்றனர்.
இதனால் அவர்களது உடலில் நீர்த்தன்மை குறைவடைந்து, பல்வேறு தோல்நோய்களுடன், நெஞ்சுவலி, மயக்கம், தலைசுற்று, தலைவலி என்பதோடு, தற்காலிக பாரிசவாதம் மற்றும் மூளைப் பாதிப்பும் ஏற்படும் சாத்தியங்கள் இருப்பதாக வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்தநிலையில் சிறார்களின் உடலில் எந்த நேரமும் நீர்த்தன்மை பேணப்படும் வகையில், ஆகாரப் பானங்களை வழங்குமாறு வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
அத்துடன் அதிக வெப்பமான காலநிலையின் போது வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.