விறகுடன் சட்டவிரோதமாக ஒரு தொகை பலா மரக்குற்றிகளை ஏற்றி சென்ற லொறியை கம்பளை பிரதேசத்தில் வைத்து பொலிஸார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.குறித்த சம்பவம் 23.05.2018 அன்று இரவு இடம்பெற்றுள்ளதுடன், வெலாம்பொட பகுதியில் இருந்து சட்டவிரோதமாக புஸ்ஸல்லாவ பகுதிக்கு விறகுடன் பலா மரங்களை மறைத்து வைத்து கொண்டு சென்ற போது, பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கடுகண்ணாவ கம்பளை பிரதான வீதியில் கம்பளை பகுதியில் வைத்து இவ்வாறு சுற்றிவளைத்து சோதனையை மேற்கொண்ட பொழுது பலா மரங்களை சட்டவிரோதமாக கொண்டு சென்றது கண்டறியப்பட்டது.
அதன்பின் லொறி சாரதியை கைது செய்த பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்ட போது, விறகுகளை கொண்டு செல்வதற்கு அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொண்டு, விறகுடன் பலா மரக்குற்றிகளை மறைத்து வைத்து கொண்டு சென்றது தெரியவந்துள்ளது.
அதனையடுத்து லொறியையும், பலா மரங்களையும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்ற கம்பளை பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(க.கிஷாந்தன்)