தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் 25ம் திகதி மாலை 4 மணி வரையளவில் 449 குடும்பங்களை சேர்ந்த 1788 பேர் பாதிக்கபட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் ஆர்.எம்.பி.புஷ்பகுமார தெரிவித்தார்.இதில் பாதிக்கப்பட்டவர்கள் இடம்பெயர்ந்து முகாம்களில், உறவினர், அயலவர் வீடுகளில் தங்கியுள்ளனர். மேலும், சீரற்ற காலநிலையினால் நுவரெலியா மாவட்டத்தில் 97 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதோடு, 5 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளது.
மேலும், வலப்பனை பகுதியில் அதிக வெள்ளம் காரணமாக நீரில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் ஒருவனின் உயிரிழப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனர்த்த உதவிகளை நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு, கிராம சேவகர் பிரிவு ஆகியன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
பாரிய பாதை வெடிப்புக்கள், குடியிருப்பு வெடிப்புகள் ஆங்காங்கே இடம் பெற்றுள்ளன. கடுமையான குளிர் காரணமாக தோட்ட தொழிலாளர்கள் பெரும் இன்னல் நிலையை எதிர்நோக்கி வருகின்றனர்.
தொழில்களுக்கு செல்ல முடியவில்லை. சென்றாலும் தொழில் செய்ய முடியவில்லை. விவசாயிகளுக்கும் பாரிய நட்டங்கள் ஏற்பட்டுள்ளன. பாதைகளில் பாரிய பனிமூட்டம் காணப்படுவதனால் சாரதிகள் கவனமாக வாகனங்களை செலுத்துமாரு போக்குவரத்து சபையினர் தெரிவிக்கின்றனர். தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தினால் பல இடர் அனர்த்தங்கள் இடம்பெற்று வருகின்றன. இதில் தாழ் நில பிரதேசங்களே பெரும்பாலும் பாதிப்படைந்துள்ளது.
தற்போது சில நீர் நிலைகளில் மழை நீர் நிரம்பி வருகின்றது. மேல் கொத்மலை, காசல்ரீ, மவுஸ்ஸாக்கலை, லக்ஷபான, கெனியன், விமலசுரேந்திர போன்ற நீர்தேக்கங்களின் நீரின் மட்டம் உயர்ந்துள்ளது.
(க.கிஷாந்தன்)