கூட்டு ஒப்பந்தத்தை சீர்குலைக்க புதுவீட்டுக் கதையில் புதிய நாடகம் அரங்கேற்றம் பித்தலாட்டங்களுக்கு ஊடகங்களைப் பயன்படுத்தாதீர் – ஊடகப் பிரிவு
தோட்ட மக்களின் சம்பள நிர்ணயம் மற்றும் நலன்சார்ந்த நடவடிக்கைகள் சம்பந்தமான கூட்டு ஒப்பந்தம் இம்முறை மிக நிதானத்துடனும் எச்சரிக்கையுடனும் அணுகப்பட வேண்டியதன்அவசியத்தை இ.தொ.கா உணர்ந்து கொண்டு அதற்கான முன்னகர்வுகளை பரந்தளவில் மேற்கொண்டுள்ளது.
இதன் ஓர் அங்கமாக ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் ஏனைய தொழிற்சங்கங்களையும் அழைத்து கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகின்றது. இதனை தோட்ட மக்கள் உன்னிப்பாக அவதானித்து வருகின்ற அதேநேரம் வரவேற்பையும் வழங்கியுள்ளனர். இந்த ஆரோக்கியமான சூழலை பலவீனப்படுத்துவது போல் மலையக ஜாம்பவான்கள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் மக்களை வீதிக்கு இறக்கி கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்கள்.
இந்த தீர்க்கதரிசனமற்றவர்களின் வாதப்பிரதிவாதங்கள் குறித்து இ.தொ.கா வியப்படைந்திருக்கின்றது. அண்மையில் மலையக பாரம்பரிய அமைச்சர் ஒருவர் கூட்டு ஒப்பந்தம் சம்பந்தமாக தெரிவித்துள்ள கருத்துத் தொடர்பாகவும் அவற்றுக்கு
பதிலளிக்கும் வகையில் இ.தொ.கா ஊடகப்பிரிவு அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில்
மேலும் தெரிவித்துள்ளதாவது:
இ.தொ.கா சமூகத்தின் தேவையை உணர்ந்து செயற்படுமே தவிரபேதங்களைப் பார்ப்பதில்லை.தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வோடு அவர்களின் நலன் சார்ந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளப்படுவதால் அதற்கு முன்னுரிமை கொடுத்து தற்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.
குறிப்பாக தோட்டங்கள் காடாகிக் கிடப்பதால் தொழில் செய்வோருக்கான பாதுகாப்பு குறைவடைந்து போயுள்ளது. தோட்டங்களை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற நோக்கம் தோட்டக் கம்பனிகளிடம் இல்லை என்பதை எமது தலைவர் பகிரங்கமாக சுட்டிக் காட்டியுள்ளார்.
தோட்டங்கள் அபிவிருத்தி செய்ய வேண்டும். தேயிலைத் தொழிலை நவீனமயப்படுத்த வேண்டும் என்ற அக்கறை எதுவுமின்றி எந்தளவுக்கு தொழிலாளர்களை நசுக்க முடியுமோ அந்த அளவுக்கு நசுக்குகின்றனர். இந்த பெருந்தோட்டக் கம்பனிகள் தோட்டங்களில் முதலீடு செய்யவில்லை. தோட்டங்களை விட்டு செல்லுங்கள் என்றால் பெட்டி படுக்கையுடன் தயாராக இருக்கும் நிலையில் நாம் ஒற்றுமையுடன் தீர்க்க தரிசனத்துடன் காரியமாற்ற வேண்டுமே தவிர தோட்டத் தொழிலாளர்களை குழப்பும் வகையில் நடவடிக்கைகளில் இறங்குவது புத்திசாலித்தனமாக இருக்காது.
இது கம்பனி தரப்புக்கு சாதகமாகவே அமையும். உண்மையில் தோட்ட மக்களின் வாழ்வாதாரம் நலன்சார்ந்த நடவடிக்கைகளில் இவர்களுக்கு அக்கறை இருக்குமாயின் அரசாங்கத்துடன் நிதானமாக காய்நகர்த்தி தோட்டக் கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுக்க ஆவன செய்ய வேண்டும். ஆனால் அதனை செய்யாமல் தோட்ட மக்களை வீதிக்கு இறக்குவது என்பது கேலிக்கூத்தாக அமைவதுடன் மக்களின் சக்தியையும் மழுங்கடிக்கவுமேயாகும். பல்வேறு வடிவங்களில் போராட்டங்களை நடத்துவதாக இருந்தால் அவற்றைத் தீர்த்து வைக்கும் திறனும் இருக்க வேண்டும்.
அப்படியல்லாது புது வீட்டுக்கதையில் புதிய நாடக அரங்கேற்றத்தை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15இல் நடாத்தப் போவதால் என்ன பயன் தரப்போகிறது? தாபாத்திரங்களில் திலகமிட்டவர் சிகரத்தை தொட்டவர் எவராயிருப்பினும் செப்டம்பர்
மாதத்தில் அதிர்ச்சி வைத்தியம் பார்க்க வேண்டிய நிலை இ.தொ.கா விற்கு ஏற்படுமோ போல் தெரிகிறது. எவ்வாறாயினும் தமது பித்தலாட்டங்களை மூடிமறைப்பதற்கு ஊடக பரிவாரங்களோடு அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களை பயன்படுத்த முயலக் கூடாது என்பதையும் ஊடக தர்மத்தை மதித்து நடக்க வேண்டிய அவசியத்தையும் நாம் சுட்டிக்காட்ட
விரும்புகின்றோம்.
எஸ்.தேவதாஸ்