உள்ளூராட்சி மன்றத்தினூடாகவே பெருந்தோட்ட மக்களுக்கு சேவை செய்ய கூடிய வகையில், திருத்தம் செய்வது தொடர்பில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜினால் 2015 ஆம் ஆண்டு முதன் முறையாக பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பிரேரணை மீதான விவாதம் மேற்கொண்டு அதனை அமுல்ப்படுத்துவதற்கு துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துவதுடன் இதற்கு பொறுப்பான அமைச்சர் பைசர் முஸ்தபா இது தொடர்பில் உரிய கவனம் செலுத்துவார் என எதிர்ப்பார்ப்பதாக நோர்வூட் பிரதேச சபை உறுப்பினர் மு. ராமசந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நோர்வூட் பிரதேச சபையின் பொதுக்கூட்டம் நேற்று இடம்பெற்ற போது பிரதேச சபைகள் தொடர்பான விடயங்கள் அடங்கிய பிரேரணையொன்றை முன்வைத்து பேசும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,
பெருந்தோட்ட மக்களின் வாக்குகளில் இந்த சபைக்கு தெரிவாகிய உறுப்பினர்களாகிய நாங்களும், அச்சபைக்கு தலைமை தாங்கும் நீங்களும் ,அம்மக்களுக்கு அவையினூடாக எதையுமே செய்ய முடியாதவர்களாகவே இது நாள் வரையில் இருக்கின்றோம் , 90 சதவீத பெருந்தோட்ட மக்களின் வாக்குகளினால் தெரிவாகிய இச்சபையின் உறுப்பினர்களாகிய நாங்கள், அவர்கள் முன் செல்ல முடியாத நிலையிலேயே இருக்கின்றோம். இது எனக்கு மட்டுமன்றி, சகல உறுப்பினர்களின் நிலையாகவும் உள்ளது.
பெருந்தோட்ட மக்களுக்கு 90 வீதமான அபிவிருத்திகளை இச்சபையின் ஊடாகவே கொண்டு செல்ல வேண்டியது அனைவரும் அறிந்த விடயம். இந்நிலையில் இன்று நான் இச்சபையில் முன்வைக்கும் இந்த பிரேரணையானது, பிரதேச சபை விதிமுறையை மீறியதொன்றாக இருக்கலாம், ஆயினும் எமது மக்களின் தற்கால தேவை கருதி இதனை இன்று முன்வைக்கின்றேன்.
1987 ஆண்டு 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டம் பெருந்தோட்டப்பகுதிகளுக்கு பிரதேச சபைகள் பணியாற்றுவதை அனுமதிக்கவில்லை. இந்த சட்டம் தெரியாமலேயே பெருந்தோட்டப்பகுதி மக்கள் இன்றுவரை பிரதேச சபைத் தேர்தல்களில் வாக்களித்து தமது பிரதிநிதிகளை அனுப்பி வருகின்றனர்.
அந்த சட்ட திருத்தமானது வரலாற்று சிறப்பு மிக்க முக்கிய விடயமாக காணப்படுகின்ற நிலையில், உள்ளூராட்சி மன்றத்தினூடாகவே பெருந்தோட்ட மக்களுக்கு சேவை செய்ய கூடிய வகையில், திருத்தம் செய்வது தொடர்பில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ திலகராஜ் அவர்களினால் 2015 ஆம் ஆண்டு முதன் முறையாக பாராளுமன்றத்தில் பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டது.
இந்த திருத்தம் பற்றிய விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பிய கௌரவ பாராளுமன்ற உறுப்பினருக்கு பெருந்தோட்ட மக்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அந்த பிரேரனைக்கு பத்ரி அளித்த மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா, திருத்தம் செய்வதற்கு உடன்பட்டிருந்தார்.
எனினும் மேற்படி திருத்தம் பாராளுமன்றத்தில் இதுவரை விவாதத்திற்கு எடுத்து க்கொள்ளப்படாமை வருத்மளிக்கிறது. பெருந்தோட்டப்பகுதிகளுக்கு பிரதேச சபைகள் பணியாற்றுவதை முழுமையாக அனுமதிக்க அமைச்சர் பைசர் முஸ்தபா துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த சபையினூடாக நாட்டின் அதியுயர் சபையான பாராளுமன்றத்திற்கு ஏனைய மக்கள் பிரதிநிதிகள் சார்பாக வலியுறுத்துகின்றேன். தேவையான திருத்தங்கள் அனைத்தும் செய்யப்பட்டு திருத்தச் சட்ட நகலும் சமர்ப்பிக்கப்படுள்ள நிலையில் பாராளுமன்ற விவாதத்துக்கு எடுத்துக் கொள்வதில் உள்ள தாமதத்தை நீக்கக்கோரி நுவரெலியா மாவட்டத்திலுள்ள சகல பிரதேசசபைகளிலும் இவ்விடயம் தொடர்பில் அழுத்தம் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.
பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்