நாளைய போராட்டம் தலவாக்கலையில் ம.மா.சபை உறுப்பினர் ஸ்ரீதரன்

0
168

தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச்சம்பளத்தை அதிகரிக்கக் கோரி பெருந்தோட்டக்கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் தலவாக்கலையில் 23.9.2018 ஆம் திகதி இடம் பெறவுள்ள கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதிநிதிச்செயலாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

இந்தப் போராட்டம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது :

தோட்டத் தொழிலாளர்கள் தற்போது அடிப்படைச்சம்பளமாக 500 ரூபாவை மாத்திரமே பெற்று வருகின்றனர். இந்த அடிப்படைச்சம்பளத்தை வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கேற்ப பெருந்தோட்டக்கம்பனிகள் அதிகரிக்க வேண்டும். இவ்விடயம் தொடர்பில் தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துடன் பேரம் பேசுகின்ற தொழிற்சங்கங்களுக்கு எமது ஆதரவை தருகின்றோம் என்ற அடிப்டையில் முன்னெடுக்கப்படுகின்ற இந்தக்கவனீர்ப்புப் போராட்டத்துக்குத் தோட்டத் தொழிற்சங்கங்கள் , அரசியற்கட்சிகள் , ஆசிரிய தொழிற்சங்கங்கள் , பொது அமைப்புக்கள் என்பன ஆதரவு தெரிவித்துள்ளன. மலையகத்தில் ஒற்றுமையாக முன்னெடுக்கப்படவுள்ள இந்தப்போராட்டதுக்கு நாடெங்கிலுமிருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

2016 ஆம் ஆண்டு ஓக்டோபர் மாதம் 18 ஆம் திகதி பிற்பகல் 3.30 மணிக்கு கடந்த முறை கூட்டொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இந்தக் கூட்டொப்பந்தத்தில் அடிப்படைச்சம்பளம் 500 ரூபாவும் நிலையான விலைக்கொடுப்பனவு 30 ரூபாவும் உற்பத்தி திறன் கொடுப்பனவு 140 ரூபாவும் வருகைக் கொடுப்பனவு 60 ரூபாவுமாக மொத்தமாக 730 ரூபாய் சம்பளமென குறிப்பிடப்பட்டு 2016 ஆம் ஆண்டு ஓக்டோபர் 15 ஆம் திகதி முதல் இந்தக்கூட்டொப்பந்தம் அமுலுக்கு வந்தது.மேலும் இந்த ஒப்பந்தத்தின் படி தினசரிக் கூலியாக, 500 ரூபாய் வழங்கப்படும். இந்த ஊதியத்துக்கே, ஊழியர் சேமலாப நிதிய, ஊழியர் நம்பிக்கை நிதிய வரப்பிரசாதங்கள் வழங்கப்படும். தினசரிக் கூலி தவிர, தினசரி வருகைக் கூலியாக, 60 ரூபாய் வழங்கப்படும். மாதாந்தம் வழங்கப்படும் வேலை நாட்களில் 75 சதவீதமானவற்றுக்கு வருகை தருவோருக்கு இது வழங்கப்படும்.

இதைக் கணக்கெடுக்கும் போது, ஞாயிற்றுக்கிழமைகள், போயா தினங்கள், ஏனைய சட்டமுறைப்படியான விடுமுறை தினங்கள் ஆகியன கணக்கிலெடுக்கப்படாது. இதற்கு முன்னைய 3 மாதங்களிலும் 75 சதவீதமான வருகையைப் பதிந்து, நடப்பு மாதத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் காரணமாக, இந்த 75 சதவீதத்தை ஒருவர் அடையவில்லையெனில், வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்ட நாட்கள், வேலை செய்த நாட்களாகக் கருத்திலெடுக்கப்பட்டுக் கணிக்கப்படும். நிலையான விற்பனைப் பகிர்வுக் கொடுப்பனவாக தினசரி 30 ரூபாய் வழங்கப்படுவதோடு, வழங்கப்பட்ட பணிகள் பூர்த்தி செய்யப்பட்ட நாட்களில் உற்பத்தித்திறன் கொடுப்பனவாக, தினசரி 140 ரூபாயும் வழங்கப்படும். நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு மேலதிகமாகப் பறிக்கப்படும் ஒவ்வொரு கிலோகிராம் தேயிலைக்கும், 25 ரூபாய் வழங்கப்படும். இவற்றுக்கு மேலதிகமாக, ஞாயிற்றுக்கிழமைகளில் புரியப்பட்ட பணிக்காக, அடிப்படைச் சம்பளமான 500 ரூபாயின் ஒன்றரை மடங்கு (750 ரூபாய்) வழங்கப்படுவதோடு, நிலையான விற்பனைப் பகிர்வுக் கொடுப்பனவாக 30 ரூபாய் வழங்கப்படும்.

இறப்பர் தொழிலாளர்களுக்கு, மேற்குறிப்பிடப்பட்டவற்றில், மேலதிக கிலோகிராமுக்கான கொடுப்பனவு தவிர ஏனையவை, ஒரே மாதிரியாகவே காணப்படும். மேலதிகமான ஒரு கிலோகிராம் இறப்பருக்கான கொடுப்பனவு, 35 ரூபாயாக வழங்கப்படும். மேற்படி கொடுப்பனவுகளைத் தவிர, வேறு எந்தக் கொடுப்பனவும் வழங்கப்படாது என, இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறான நிபந்தனைகளுக்கேற்ப நடைமறைப்படுத்தப்பட்டு வருகின்ற இந்தக்கூட்டொப்பந்தம் அடுத்த மாதம் 15 ஆம் திகதியுடன் காலாவதியாகின்றது . எனவே புதிய ஒப்பந்தத்தில் தொழிலாளர்களின் அடிப்படைச்சபளம் அதிகரிக்கபடுவதோடு தொழிலாளர்களின் நலன் சார்ந்த விடயங்களுக்கு இந்த ஒப்பந்தத்தில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். இவற்றுக்கு பெருந்தோட்டக்கம்பனிகள் உடன்படி வேண்டும் என்பதை வலியுறுத்தியே இன்றைய போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது என்றார்.

 

 

தலவாக்கலை நிருபர் பி.கேதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here