கினிகத்தேனை கூல் போன் தோட்டத்தில் தமிழ் பாலர் பாடசாலை ஆரம்பிக்கபட்டுள்ளது….

0
186

மத்திய மாகாணத்தின் நுவரெலியா மாவட்டத்தினை சேர்ந்த கினிகத்தேனையில் இருந்து நாவலப்பிட்டிய செல்லும் பிரதான பாதையிலிருந்து அம்பகமுவ பிரதேச சபைக்குட்பட்ட மலைப்பகுதியில் சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கூல் போன் அழகிய தனியார் தோட்டம். இந்த தனியார் தோட்டத்தில் சுமார் 150 தமிழ் குடும்பங்கள் உள்ளன. எனினும், ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட இந்த தோட்டத்தில் இன்றுவரை பாலர் பாடசாலை ஒன்று இல்லாமல் இருந்தது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.இந்த தோட்டத்தில் தரம் 1 முதல் 5 வரை கல்வி பயில மாகாண மட்ட பாடசாலையான கூல்போன் தமிழ் வித்தியாலயம் காணப்படுகின்றது. இருந்தும், இதுவரை காலமும் தரம் ஒன்றிற்கு உட்சேர்க்கப்படும் மாணவர்கள் அனைவரும் எவ்வித தயார்படுத்தல்களும் இன்றியே சுமார் 80 வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட இந்த பாடசாலைக்கு அனுமதிக்கப்பட்டுவந்துள்ளனர்.

எனவே இந்த பிரதேசத்தின் எதிர்கால கல்விக்கு பாலர் பாடசாலை ஒன்றின் தேவையை உணர்ந்த ஆசிரியர்கள் மற்றும் நலன் விரும்பிகளின் வேண்டுகோளுக்கு இணங்க மஸ்கெலியா பகுதியில் இயங்கிவரும் ஹார்ட்ஸ் HEARTS (Human Education Aid Relief Trust of Social Welfare Development Source ) சமூக நல அபிவிருத்தி ஸ்தாபனத்தினால் கடந்த செப்டெம்பர் 24 ஆம் திகதி இந்த தோட்டத்தில் ஆரம்ப பாடசாலை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 2009 ஆம் ஆண்டு பாலர் பாடசாலைகாக அமைக்கப்பட்ட கட்டிடத்தில் இவ் பாலர் பாடசாலை அனைவரின் வரவேற்புடனும் இனிதே ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது,

மத வழிப்பாட்டுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில் சிறுவர்களின் கலை நிகழ்சிகள் நிகழ்வை மேலும் மெருகூட்டின, பாடசாலைக்கான கற்றல் உபகரணங்கள் அனைத்தும் ஹாட்ஸ் நிறுவனம் மற்றும் நலன் விரும்பிகளால் இலவசமாக வழங்கப்பட்டது. மேலும், இந்நிகழ்வில் ஹாட்ஸ் சமூக நல அபிவிருத்தி ஸ்தாபன தலைவர் மோகன், சட்டத்தரணி ச.ஹெரோஷன் குமார் , ஆசிரியர் புவனேஸ்வரி , ஆசிரியர் லோகேஸ்வரன் ,ஆசிரியை இந்துமதி, கூல் போன் தோட்ட முகாமையாளர், சமூக ஆர்வலர் சந்திரமோகன், வர்த்தகர் நாகேஷ்வரன், இளைஞர் கழக தலைவர் பிரபா , பெற்றோர் மற்றும் நலன்விரும்பிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். எதிர்கால மலையக வளர்ச்சிக்கு இந்நிகழ்வு நல்லதொரு ஆரம்பமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here