மலையக தோட்டப் பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை துரிதமாக ஏற்படுத்துவதற்கான வேலை திட்டம் ஒன்றினை அமைச்சர் பழனி திகாம்பரம் முன்னெடுத்துள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதிநிதிச் செயலாளரும் மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
அட்டன் செனன் தோட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள வீடமைப்பு திட்ட அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜ் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந்த நிகழ்வில் ஸ்ரீதரன் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது;
மலையக தோட்ட பகுதியில் வீடமைப்புத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்ற அதேவேளை இந்தத் தோட்டங்களில் வாழுகின்ற மக்களின் நலன் கருதி உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க மலையக புதிய கிராம உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. பாதை, குடிநீர் உட்பட பல வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்த அடிப்படையில் சென் தோட்டப் பிரிவுகளின் கடந்த ஒரு வருட காலத்தில் பல்வேறுபட்ட வேலைத்திட்டங்கள் பாரபட்சமின்றி மேற்கொள்ளப்படுகின்றன. இந்தத் தோட்டத்தில் முதற்கட்டமாக 20 பேருக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட உள்ளன. அதேவேளை இந்த தோட்டத்தில் வீட்டு வசதி இல்லாத ஏனையவர்களுக்கும் வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்கு அமைச்சர் திகாம்பரம் நடவடிக்கை எடுக்க உள்ளார். இந்த அடிப்படையில் எவ்விதமான தொழிற்சங்கங்கள் ஏதுமின்றி எமது வேலைத்திட்டங்களை முன்னெடுக்கப்படவுள்ளன. இதனைக் கருத்தில் கொண்டு ஏனைய தொழிற்சங்கங்களை சேர்ந்த ஆதரவாளர்கள் எம்முடன் நாளுக்கு நாள் இணைந்து கொள்வதில் ஆர்வம் செலுத்தி வருவதை நாம் வரவேற்கின்றோம்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர்