“வேலை நேரத்திலும் வேகாத வெயிலில் வேகின்றோம்,சம்பளத்திற்காகவும் வேகாத வெயிலில் நின்று போராடுகின்றோம்”நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட மக்கள் புலம்பலுடன் போராட்டம் முன்னெடுப்பு.
மலையகத்தில் போராட்டங்கள் வெடித்து கொண்டிருந்த இந்நாளில் கந்தப்பளை நகர மக்களும் மனித சங்கிலி அடையாள போராட்டத்தை மேற்கொண்டனர்.
பலர் 1000ரூபாயே அடிப்படை என அடி மனதில் இருந்து கத்தினர் .தோட்டத்தை அரசிடம் ஒப்படை இல்லையேல் 1000 ரூபாய் கொடு என சிலர் கண்ணீருடன் ஒலி எழுப்பியதும் பதிவாகியது.இன்னும் சில பெண்கள் மண்டையை பிளக்கும் வெயில் அதிக வெப்பமாக காணப்பட்ட தார் பாதையில் அமர்ந்து நீர்,ஆகாரமின்றி தொண்டை வலிக்க வலிக்க தமது கோரிக்கையை முன்வைத்தனர்.
நுவரெலியா பிரதேச சபை தவிசாளர் வேலு யோகராஜ் தலைமையில் இடம்பெற்ற இப்போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துக்கொண்டனர்.
வேலை நேரத்திலும் வேகாத வெயிலில் வேகின்றோம்,சம்பளத்திற்காகவும் வேகாத வெயிலில் நின்று போராடுகின்றோம் என மக்கள் தமது கஸ்டநிலையை ஒரு வரியில் உணர்த்தி ஒலி எழுப்பினர்.
முச்சக்கரவண்டி சாரதிகளும் பாரிய அளவு ஆதரவை வழங்கினர்.அதுமட்டுமல்லாமல் நகர வர்த்தகர்களும் தொழிலாளர்களுக்கு கடைகளை அடைத்து ஆதரவு வழங்கினர்.அது மட்டுமல்லாது இப்போராட்டத்தில் இ.தொ.கா பிரதி பொது செயலாளர் ஜீவன் தொண்டமான் மற்றும் சட்டத்தரணி ராஜதுரை மற்றும் தோட்டத்தொழிலாளர்கள் நுவரெலியா பிரதேச சபை உறுப்பினர்கள் பங்கேற்று கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த்