தோட்டத் தொழிலாளர்கள் 1000 ரூபா அடிப்படைச் சம்பளத்தினை வலியுறுத்தி இன்றோடு மூன்றாவது நாளாக போராடி வருகின்றனர். இது அவர்களது நியாய பூர்வமான கோரிக்கையாகும். எனவே அனைத்து பெருந்தோட்ட சேவையாளர்களும் இப்போராட்டத்தில் ஒன்றிணைந்து கைகோர்க்குமாறு பெருந்தோட்ட சேவையாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், இ.தொ.கா நிர்வாக உப தலைவருமான சட்டத்தரணி கா.மாரிமுத்து அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து ஊடகங்களக்கு அவர் அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சனையும் கண்டு கொள்ளப்படாதுள்ளது. இந்த 1000 ரூபா பிரச்சனையை தீர்ப்பதற்கு முதலாளிமார் சம்மேளனத்திடம் பேச்சு வார்த்தை நடாத்தி எவ்வித பயனும் கிட்டவில்லை. காலம் காலமாக தோட்டங்களையே நம்பி உழைத்துவரும் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா அடிப்படைச் சம்பளம் நியாயபூர்வமானது. ஆனால் தோட்டக் கம்பனிகள் ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை. 1992ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கூட்டு ஒப்பந்தம் இன்றோடு 26 வருடங்களைக் கடந்த நிலையில் அவர்களுக்கான அடிப்படைச் சம்பளம் 1000 ரூபாவாகக் கூடவில்லை.
அதிக இலாபத்தை தோட்டக் கம்பனிகளுக்கு பெற்றுத் தரும் தோட்டத் தொழிலாளர்களுக்கு வெறுமனே 500 ரூபா மட்டுமே. இதனை எவ்விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆகவேதான் இதனை நம் மக்கள் மயமாக மக்களுடைய போராட்டமாக உருவெடுத்துள்ளது. எவ்வாறாயினும், போராட்ட வர்க்க சிந்தனையோடு ஆரம்பிக்கப்பட்டுள்ள போராட்டத்திற்கு நல்லெண்ணம் கொண்ட அனைத்துத் தரப்பினரும் இதற்கு ஆரதரவளித்து குறிப்பாக பெருந் தோட்ட சேவையாளர்கள் இதனோடு கைகோர்த்து போராட்டத்தை வெற்றிப் பாதையில் இட்டுச் செல்ல வேண்டிய பணிக்கு ஒன்றிணைவோக என்றார் சட்டத்தரணி மாரிமுத்து.
எஸ்.தேவதாஸ்
ஊடக இணைப்பாளர்