தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை அதிகரித்து கொள்வதற்காக பெருந்தோட்ட கம்பனிகளை இணக்கப்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான உபாயங்களை இலக்காக கொண்டே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வியூகங்களை அமைத்து செயற்பட்டு வருகின்றது என இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உப தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் தற்போத நிலை தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தோட்டக்கமிட்டி தலைவர்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் அட்டன் பிரதேசங்களில் நடைபெற்ற கூட்டங்களில் கலந்து கொண்டு பேசும் போது அவர் தெரிவித்தாவது.
1992ம் ஆண்டுக்கு முன்பு தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை நிர்ணயித்த சம்பள நிர்ணய சபை முறை தோட்டத் தொழிலாளர்களுக்கு சாதகமாக அமைந்திருக்கவில்லை. அதனால் அந்த முறைக்கு பதிலாக உலகலாவிய ரிதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்த முறையை சட்டமாக்கும்படி இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் சௌமிய மூர்த்தி தொண்டமான் அவர்கள் அரசாங்கத்திற்கு முன்மொழிவை முன்வைத்தார். இந்த விடயத்தை கூட இலங்கை தொழிலாளர் காங்கிரசின் அப்போதய அரசியல் பலத்தையும் அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமானின் சாணக்கியத்தின் மூலமாகவுமே அடைய முடிந்தது. இன்று சிலர் நினைப்பது போல கூட்டு ஒப்பந்த முறையை தங்கத்தட்டிலே வைத்து வைத்து முதலாளிமார் சம்மேளனம் தொழிற்சங்கங்களுக்கு சமர்பிக்கவில்லை. மாறாக அப்போதய ஜனாதிபதி பிரேமதாச அவர்களுக்கு தொடர்ச்சியாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கொடுத்த வேண்டுகோளுக்கிணங்க அப்போதய ஜனாதிபதியால் பெருந்தோட்ட நிறுவனங்களை கூட்டு ஒப்பந்த முறைக்கு நிர்பந்தித்து ஒத்துக்கொள்ள செய்யப்பட்டது. இன்று வரலாறு தெரியாமல் , கூட்டு ஒப்பந்த முறையிலுள்ள நன்மைகள் புரியாமல் வெளிவருகின்ற கருத்துக்கள் அரசியல் இலாபத்தை அடிப்படையாக கொண்டவையாகும்.
முதலாளிமார் சம்மேளனம் முதலில் அடிப்படை சம்பளத்தில் ஐம்பது ரூபாவை மட்டுமே அதிகரிக்க முன்வந்தது. இந்த நிலையில் முதலாழிமார் சம்மேளனத்திற்கு பல்வேறு வகையான அழுத்தங்களை கொடுக்கும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இந்த போராட்டங்களுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அழைப்பு விடுக்கவில்லை. ஆயினும் மலையகத்தில் பல்வேறு தொழிற்சங்க அமைப்புக்கள் , ஏனைய பொது அமைப்புக்கள், மாணவர்கள், இளைஞர்கள், மற்றும் தனிநபர்கள் நடத்திய சகல போராடங்களிலும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு பங்களிப்பை செலுத்தியிருந்தனர். இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானினதும், இலங்கை தொழிலாளர் காங்கிரசினதும் நிலைப்பாடு யார் போராட்டத்திற்கு அழைப்புவிடுகிறார்கள் என்பது முக்கிமல்ல, எதற்காக போராட்டம் நடத்தப்படுகிறது என்பதிலேயே கவணம் செலுத்தப்பட்டது. தோட்டத் தொழிலாளரின் சம்பள அதிகரிப்புக்காக நடத்தப்பட்ட சகல போராட்டங்களுக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தார்மீக ஆதரவை வழங்கி வரவேற்றது. ஆனால் சில தொழிற்சங்கள் அவற்றின் தலைவர்களாகவுள்ள அமைச்சர்கள் இந்த சம்பள உயர்வு போராட்டத்தை பயன்படுத்தி எப்படி இலங்கை தொழிலாளர் காங்கிரசை நலிவடைய செய்யலாம் என்றும் ஆறுமுகன் தொண்டமானை அவமானப்படுத்தலாம் என்றும் வியூகம் அமைத்து செயற்படடனர். பெருந்தோட்ட கம்பனிகளுடன் இரகசிய உறவை சிலர் பேணிவந்தார்கள். அலரி மாளிகையில் இருந்துகொண்டு வேலை நிறுத்தப் போராட்த்தை ஆதரிக்க முடியாது என்றும், தொழிலாளர்களை வேலைக்கு செல்லுமாறும், தமது அரசாங்கம் வந்தவுடன் நியாயமான சம்பளத்தை பெற்றுத்தருவதாகவும் முதலில் அறிக்கைவிட்டனர்.பிpன்னர் தோட்டத்தொழிலாளர்களின் ஒற்றுமையை கண்டவுடன் அதே அலரிமாளிகையில் இருந்துகொண்டு தாமும் வேலைநிறுத்ப்போராட்த்திற்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்தனர். இந்த விடயத்தைக் கூட நாம் சாதகமாகவே பார்த்தோம் . ஓரிரு இடங்களில் காணப்பட்ட சலசலப்புக்களை சரிசெய்ய உதவியது. அத்துடன் தோட்டத்தொழிலாளர்கள் அனைவரையும் ஒன்றினைக்குமென எதிர்பார்த்தோம். ஆனால் இது சில இடங்களில் கம்பனிகளுக்கு எதிரான வன்முறையாக உருவெடுக்க கூடிய சாத்தியக்கூறுகள் தென்பட்டன. இது தொழிலாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை கவனத்தில் கொண்டு சில தீர்மானங்களை எடுக்கவேண்டியேற்பட்டது.
ஏவ்வாறெனினும் நாட்டில் பல்வேறு தரப்பினராளும் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு அழுத்தங்களினால் தோட்டத்தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்கியே தீரவேண்டும் என்ற நிர்பந்தம் கம்பனிகளுக்கு ஏற்பட்டுள்ளது. முன்னால் பிரதமர் மகிந்த ராஜபக்சவினால் பெருந்தோட்ட கம்பனிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்ததையின் போது சில முன்னேற்றகரமான நிலை ஏற்பட்டது. ஆனால் துரதிஸ்டவசமாக அதை தொடரமுடியாமல் போய்விட்டது. ஆயினும் தொழிற்சங்களுடன் பேசவே முடியாது என அடம்பிடித்த பெருந்தோட்ட கம்பனிகள் மக்களின் அழுத்தம் காரணமாக தமது நிலைப்பாட்டை ம hற்றிக்கொண்டு மீண்டும் பேச்சுவார்ததையில் ஈடுபட்டு வருகின்றன. பெருந்தோட்ட கம்பனிகள் அடிப்படை சம்பள விடயத்தில் விட்டுக்கொடுப்புடன் செயற்பட்டால் தொழிற்சங்கள் என்ற அடிப்படையில் நாமும் சில விட்டுக்கொடுப்புக்களை செய்வதற்கு தயாராகவே இருக்கிறோம். இதனடிப்படையில் ஜனவரி முதல் வாரத்தில் மீண்டும் கூட்டு ஒப்பந்த பேச்சுவார்ததைகளை ஆரம்பித்து மிக விரைவிலேயே இந்த விடயத்தை தொழிலாளர்களுக்கு திருப்தியளிக்க கூடிய விதத்தில் முடிவுக்கு கொண்டுவரமுடியும் என இலங்கைதொழிலாளர் காங்கிரஸ் நம்பிக்கைகொண்டுள்ளது. எனவும் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)