பெறுமதி சேர்க்கை வரி தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நேரடி பேச்சுவார்த்தையை ஏற்பாடு செய்து, தலைநகர வர்த்தகர்களின் மனக்குறையை போக்கிடும் பணியை எமது தலைவர் அமைச்சர் மனோ கணேசன் பார்த்துக்கொள்வார். அதேபோல் முன்மொழியப்பட்டுள்ள பெறுமதி சேர்க்கை வரி முறைமை மூலம் திரட்ட எண்ணியுள்ள நிதியை வேறு முறைமைகளின் மூலம் திரட்ட மாற்று யோசனைகளும் இப்போது ஆராயப்படுகின்றன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஒரே அரசாங்கத்தைதான் பிரதிநிதித்துவம் செய்கிறார்கள். இங்கே இரண்டு அரசாங்கங்கள் இல்லை. நாங்கள் பாடுபட்டு உருவாக்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஏதோ தான் உருவாக்கியதுபோல் புகழ்ந்து பேசி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை கேவலமாக விமர்சிக்க வேண்டாம் என்றும், தேவையில்லாமல் இந்த விடயத்தில் மூக்கை நுழைத்து, தலைநகர தமிழ் வர்த்தகர்களுக்கு பிரதமருடன் மோதலை ஏற்படுத்தி, குட்டையை குழப்ப வேண்டாம் என்றும் முன்னாள் பிரதியமைச்சர் பிரபா கணேசனிடம் தெரிவிக்க விரும்புகிறேன் என ஜனநாயக மக்கள் முன்னணி பிரதி செயலாளரும், மாகாணசபை உறுப்பினருமான சண். குகவரதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மாகாணசபை உறுப்பினர் சண். குகவரதன் மேலும் கூறியதாவது,
எங்கள் தலைவர் மனோ கணேசனை விமர்சிப்பதை மட்டுமே முழுநேர தொழிலாக கொண்டு செயல்படும் சில தனி நபர்கள், நாட்டிலும், சமூகத்திலும் குழப்பங்களை ஏற்படுத்த முயல்கிறார்கள். காழ்ப்புணர்ச்சிகொண்ட இந்த நபர்களையிட்டு தலைநகர தமிழ் வர்த்தக சமூகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
பெறுமதி சேர்க்கை வரி தொடர்பில் நாட்டில் ஏற்பட்டுள்ள தெளிவற்ற நிலைமையை அரசாங்கம் உணர்ந்துள்ளது. இது தொடர்பில் ஏற்கனவே அரசாங்கத்துக்குள் பாரிய கலந்துரையாடல் நடைபெற்று வருகிறது. மகிந்த ராஜபக்ச வாங்கி வைத்துவிட்டு போன கடன்களை வட்டியுடன் கட்டிமுடிக்க தேவைப்படும் நிதியை திரட்ட வேண்டியுள்ளது.
முன்மொழியப்பட்டுள்ள பெறுமதி சேர்க்கை வரி முறைமை மூலம் திரட்ட எண்ணியுள்ள நிதியை வேறு முறைமைகளின் மூலம் திரட்ட பல மாற்று யோசனைகளை நாம் இப்போது ஆலோசித்து வருகிறோம். அதன்மூலம் இன்று தெளிவற்ற முறையில் உள்ள இந்த வரி முறைமை தெளிவடையும். எனவே தேவையில்லாமல் இதில் அரசியல் செய்ய முயலவேண்டாம்.