e-BMD சேவையினால் 8,027 பேர் பயனடைந்துள்ளனர் – ஜனாதிபதி ஊடகப் பிரிவு தகவல்!

0
15

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கான e-BMD திட்டத்தினை அறிமுகப்படுத்திய முதல் ஆண்டில் 8027 பேர் பயனடைந்துள்ளனர்

அரசாங்கத்தின் அரச சேவைகளை டிஜிட்டல் மயப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் தங்கள் பிறப்பு, திருமண மற்றும் இறப்புச் சான்றிதழ்களைப் பெறுவதற்கு அறிமுகப்படுத்தப்பட்ட e-BMD கட்டமைப்பு, தற்போது 62 தூதரகங்கள் மற்றும் உயர் ஸ்தானிகராலயங்களில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றது. மேலும் இது ஆரம்பிக்கப்பட்ட முதல் ஆண்டில் 8,027 நபர்கள் நேரடியாக பயனடைந்துள்ளனர்.

அரச சேவைகளை மக்களுக்கு நெருக்கமாகக்கும் ஜனாதிபதியின் கருத்தியலுக்கு இணங்க, e-BMD திட்டம் 2025 ஜனவரி 06 ஆம் திகதி ஜனாதிபதி செயலகம் மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயற்பாட்டின் 07 நாடுகளில் ஒரு முன்னோடித் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் இந்த சேவை 2025 பெப்ரவரி 07ஆம் திகதி முதல் 62 வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் உயர் ஸ்தானிகராலயங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது.

இதன் மூலம் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்புச் சான்றிதழ்களின் உறுதிப்படுத்தப்பட்ட நகல்களை தாம் வசிக்கும் நாட்டில் உள்ள தூதரகம் அல்லது உயர் ஸ்தானிகராலயத்திலிருந்து நேரடியாகப் பெற முடியும். இந்தச் சான்றிதழ்கள் சட்டப்பூர்வ அங்கீகாரத்துடன் வழங்கப்படுவதுடன், இதற்காக இனிமேல் இலங்கைக்கு நேரடியாக வருகை தரவோ அல்லது நீண்ட கால செயல்பாட்டில் ஈடுபடவோ தேவையில்லை.

இந்தச் சேவை ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் இங்கிலாந்து, இத்தாலி, அவுஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, ஐக்கிய அரபு இராச்சியம், ஜப்பான், மலேசியா, இந்தியா மற்றும் ஏனைய ஆசிய பிராந்தியங்களில் வசிக்கும் இலங்கையர்களுக்குக் கிடைக்கிறது.

பிறப்பு, திருமணம் மற்றும் இறப்புச் சான்றிதழ்கள் வழங்குவதை டிஜிட்டல் மயப்படுத்தி, தூதரகங்கள் மற்றும் உயர் ஸ்தானிகராலயங்களை தலைமை பதிவாளர் திணைக்களத்துடன் நேரடியாக இணைப்பதன் மூலம், ஆவணங்களின் நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்து ஆவணங்களை தயார் செய்வதற்கான காலம் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது.

தலைமை பதிவாளர் திணைக்களத்தின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பப் பிரிவால் வழங்கப்படும் நிகழ்நேர (Real-time) தொழில்நுட்ப ஆதரவு காரணமாக, தூதரகங்கள் மற்றும் உயர் ஸ்தானிகராலயங்களில் செயல்பாட்டு சிக்கல்களைத் தீர்த்து தடையின்றி தொடர்ந்து இச்சேவையை செயல்படுத்த உதவியுள்ளது.

வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு நடவடிக்கைகளுக்குத் தேவையான சான்றிதழ்களைப் பெறுவதில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு இந்தத் திட்டம் பெரும் நிவாரணமாக அமைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here