P2P போராட்டத்தின் நாயகர்கள் நாமே!! யாழில் சுமந்திரன் தெரிவிப்பு

0
6

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டத்தின் நாயகர்களே நாங்கள் தான் என தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது, கடந்த காலங்களில் சுமந்திரன் போராட்டங்களை முன்னெடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் உள்ளதாக கேள்வியெழுப்பிய போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

பலருக்கு ஞாபக மறதிகள் இருக்கலாம் அல்லது தமது அரசியலுக்காக ஞாபகம் இருந்தும் மறந்து போனது போல குற்றச்சாட்டுக்களை கூறலாம்.
நாம் கடந்த காலங்களிலும் பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடாத்தி இருந்தோம்.

வலி . வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிக்க கோரி போராட்டங்களை முன்னெடுத்தோம். காணி சுவீகரிப்பு எதிராக சட்ட போராட்டங்களையும் முன்னெடுத்தோம். தற்போதும் அந்த வழக்குகள் விசாரணையில் உள்ளன.

பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க கோரி கொழும்பில் இருந்து ஹம்பாந்தோட்டையில் உள்ள மஹிந்த ராஜபக்சவின் சொந்த ஊரான தங்காலை வரையில் பேரணி சென்றோம்.

பேரணிக்காக ஒழுங்கு செய்யப்பட்ட வாகனத்தை காலி முகத்திடலில் வைத்து பொலிஸார் கடத்தி சென்றனர். அதனை போராடி மீட்டே எமது பேரணியை முன்னெடுத்தோம்.

P2P என அழைக்கப்பட்ட பொதுவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டத்தை முன்னின்று பொலிகண்டி வரையில் கொண்டுவந்து சேர்த்தது நாமே.

அன்றைக்கு சுமந்திரனும், சாணக்கியனும் இல்லை என்றால் போராட்டம் பொத்துவிலுடன் முடிக்கப்பட்டு இருக்கும் என அன்றே பலர் ஊடக சந்திப்புக்களில் கூட கூறியிருந்தார்கள்.

நாங்கள் தான் பொலிஸ் தடைகளை உடைத்து பொலிகண்டி வரை பேரெழுச்சியாக பேரணி சென்றடைய முன்நின்றோம். அதற்காக பொலிஸ் விசாரணைகளை கூட எதிர்கொண்டோம்.

இந்த ஹர்த்தால் கூட ஒரு அடையாள போராட்டமே. வடக்கு கிழக்கில் இருந்து இராணுவ முகாம்கள் முற்றாக அகற்றப்படும் வரையில் நாம் தொடர் போராட்டங்களை எதிர்காலத்தில் முன்னெடுப்போம் என மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here