Home Blog Page 5

அமெரிக்க வரி விதிப்பு குறித்தி விரைவில் இருதரப்பு ஒப்பந்தம்!

0

இலங்கைமீதான அமெரிக்காவின் வரிவிதிப்பை மேலும் குறைத்துக்கொள்வதற்காக எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதிக்குள் இரு தரப்பு ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

” இது தொடர்பில் பேச்சு நடத்துவதற்காக இலங்கை தூதுக்குழு நாளை 18 ஆம் திகதி மீண்டும் வாஷிங்டன் புறப்படுகின்றது. இரு தரப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்குரிய பேச்சு இடம்பெறுகின்றது. அது சாதகமாக முடியும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது.” எனவும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.

இலங்கையில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு ட்ரம்ப் நிர்வாகம் 44 சதவீத வரியை விதித்தது. எனினும், இலங்கை மேற்கொள்ள இராஜதந்திர பேச்சுகளின் பயனாக அது 30 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.

அந்த தொகையையே மேலும் குறைத்துக்கொள்வதற்குரிய முயற்சியே தற்போது இடம்பெற்றுவருகின்றது.

சிறு தேயிலை உற்பத்தி கிராமங்களை உருவாக்க நடவடிக்கை!

0

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் ஐந்நூறு சிறு தேயிலை உற்பத்தி கிராமங்கள் உருவாக்கப்படும் என தெரிவித்த பெருந்தோட்ட மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்தியாரத்ன, தேயிலையின் தரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இரத்தினபுரி பிரதேச செயலகத்தில் இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள சிறு தேயிலை உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் அமைச்சர் சமந்த வித்தியாரத்னவுடன் தோட்ட உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

கடந்த காலங்களில் தேயிலை தொழிற்துறையை முன்னேற்றுவதாக குறிப்பிட்டு சர்வதேச நாடுகளில் விளம்பரங்கள் வெளியிடுவதற்காக மாத்திரம் 1965 இலட்சம் ரூபா பணம் செலவிடப்பட்டுள்ளது.

உலக வங்கியிடம் மாத்திரம் 48.9 மில்லியன் டொலர்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 60 வேலைத்திட்டங்கள் தோல்வியடைந்துள்ளன. இந்த திட்டங்களுக்காக ,முன்னாள் அமைச்சர் தயா கமகேவின் மனைவி, லக்ஷ்மன் செனவிரத்னவின் மகன் மற்றும் சாலிய திசாநாயக்கவின் மனைவி ஆகியோரே பணத்தைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், தரமான தேயிலையை உற்பத்தி செய்யும் விதம், தேயிலை உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பில் உரையாற்றிய அமைச்சர், இலங்கை தேயிலை நாமத்தை உயர்நிலைக்கு கொண்டு செல்வதற்காக அனைவரும் இணைந்து செயற்படுவோம் என்றும் அழைப்பு விடுத்தார்.

சிறு தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபை மற்றும் தேயிலை ஆராய்ச்சி நிலையத்துடன் இணைந்து இலங்கை தேயிலை சபை ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஜனக சேனாரத்ன,இரத்தினபுரி பிரதேச செயலாளர் கே.எஸ். நிசாந்த ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அமெரிக்க குடியேற்ற நீதிமன்றத்தின் 17 நீதிபதிகள் பணிநீக்கம்

0

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்துவதில் ட்ரம்ப் அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், குடியேற்ற நீதிமன்றத்தின் 17 நீதிபதிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் ஜனாதிபதியாக ட்ரம்ப் 2வது முறையாக பதவியேற்ற பிறகு, சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கி உள்ளவர்களை நாட்டை விட்டு வெளியேற்றும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளார். இதற்காக குடியேற்ற அதிகாரிகளுக்கு முழு சுதந்திரம் வழங்கியுள்ளார்.

அவர்கள் பல்வேறு மாகாணங்களிலும் கடும் சோதனை நடத்தி, தொழிற்சாலைகளில் உரிய ஆவணம் இல்லாமல் தங்கியிருப்பவர்களை நாடு கடத்தி வருகின்றனர். மேலும் மெக்ஸிக்கோவை சேர்ந்த தொழிலாளர்கள் பலர் கைது செய்யப்படுகின்றனர். இவ்வாறு கைது செய்யப்படுபவர்கள் குடியேற்ற நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் நாடு கடத்தப்படுவார்கள்.

இந்நிலையில், கடந்த ஓரிரு நாட்களில் 10 மாகாணங்களில் குடியேற்ற நீதிமன்றங்களில் 17 நீதிபதிகளை ட்ரம்ப் அரசு பணிநீக்கம் செய்திருப்பதாக சர்வதேச தொழில்முறை மற்றும் தொழில்நுட்ப பொறியாளர்கள் கூட்டமைப்பு எனும் தொழிற்சங்கம் குற்றம்சாட்டி உள்ளது.

கார்ல்சனை மீண்டும் தோற்கடித்து பிரக்ஞானந்தா சாதனை!

0

அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்று வரும் ஃப்ரீஸ்டைல் செஸ் கிராண்ட் ஸ்லாம் (ரேபிட்) போட்டியில், இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா, உலகின் முதல்நிலை செஸ் வீரர் மாக்னஸ் கார்ல்சனை நான்காவது சுற்றில் தோற்கடித்து சாதனை படைத்தார்.

வெள்ளை காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 39 நகர்வுகளில் இந்த அற்புதமான வெற்றியைப் பதிவு செய்தார். இந்த வெற்றியின் மூலம், அவர் தனது குழுவில் (வெள்ளை குழு) 4.5 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார்.

இந்த முக்கியமான வெற்றி, கார்ல்சனை குழு நிலை சுற்றில் இருந்து வெளியேற்ற உதவியதுடன், பிரக்ஞானந்தாவை காலிறுதிக்கு முன்னேற்றியது. இந்த சாதனை, இந்திய செஸ் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையைச் சேர்ந்த 19 வயது இளம் வீரரான பிரக்ஞானந்தா, 16 வயதில் உலகின் நம்பர் முதல் நிலை வீரரான கார்ல்சனை 2022இல் ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் தொடரில் முதன்முறையாக வீழ்த்தி பரபரப்பை ஏற்படுத்தியவர்.

அப்போது, 39 நகர்வுகளில் கார்ல்சனை தோற்கடித்து, உலகின் இளம் வயது கிராண்ட் மாஸ்டர்களில் ஒருவராக பிரக்ஞானந்தா புகழ் பெற்றார். இந்த முறையும், லாஸ் வேகாஸில் நடந்த இந்தப் போட்டியில், அவரது தந்திரமான நகர்வுகள் மற்றும் கூர்மையான மூலோபாயம் கார்ல்சனை திணறச் செய்தது.

இந்தப் போட்டியில், கார்ல்சனின் வழக்கமான ஆதிக்கம் பிரக்ஞானந்தாவின் முன் தோல்வியடைந்தது. கார்ல்சன், செஸ் உலகில் ஒரு ஜாம்பவானாகக் கருதப்படுகிறார், ஏனெனில் அவர் ஐந்து முறை கிளாசிக்கல் செஸ் உலக சாம்பியன் பட்டத்தை வென்றவர்.

ஆனால், பிரக்ஞானந்தாவின் சாமர்த்தியமான ஆட்டம், கார்ல்சனின் தவறுகளைப் பயன்படுத்தி, ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.

இந்த வெற்றி குறித்து, முன்னாள் உலக சாம்பியன் கேரி காஸ்பரோவ், “பிரக்ஞானந்தாவின் ஆட்டம், இளம் வீரர்களுக்கு ஒரு முன்மாதிரியாக அமைகிறது,” என்று பாராட்டினார்.

இந்தியாவில் செஸ் விளையாட்டு, விஸ்வநாதன் ஆனந்த் மூலம் பிரபலமடைந்தது, இப்போது பிரக்ஞானந்தா, குகேஷ் போன்ற இளம் வீரர்கள் அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கின்றனர் எனவும் பாராட்டி பேசியுள்ளார்.

இந்த போட்டியில் வெற்றிபெற்ற பிரக்ஞானந்தாவுக்கு பலரும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

இஸ்ரேல் அமைச்சரவைக்குள் பிளவு!

0

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான கூட்டணி அரசில் இருந்து தீவிர ஷாஸ் கட்சி நேற்று (16) விலகுவதாக அறிவித்துள்ளது.

மதக் கல்வி பயிலும் மாணவர்களுக்கான கட்டாய இராணுவச் சேவையில் இருந்து விலக்கு அளிக்கும் சட்டத்தை இயற்றத் தவறியதே இதற்கு முக்கிய காரணம் என்று இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

காஸா உடனான போர் 21 மாதங்களாக நடந்து வரும் சூழலில் இராணுவ சேவை விலக்கு தொடர்பான விடயம் இஸ்ரேலில் விவாதமாக மாறியுள்ளது.

கடந்த ஆண்டு இஸ்ரேல் உயர் நீதிமன்றம், மதக்கல்வி பயிலும் மாணவர்களுக்கான இராணுவ விலக்கை முடிவுக்குக் கொண்டுவர உத்தரவிட்டது. இதேவேளை புதிய இராணுவ சேவை மசோதாவை உருவாக்க பாராளுமன்றம் முயற்சி செய்து வருகிறது

மத குருக்கள், புனித நூல்களை முழுநேரம் கற்பது புனிதமானது என்றும், தங்கள் இளைஞர்கள் இராணுவத்தில் சேர்க்கப்பட்டால் மத வாழ்க்கையில் இருந்து விலகிவிடுவார்கள் என்றும் குறித்த கட்சியினர் அஞ்சுகின்றனர்.

ஷாஸ் கட்சி விலகுவதற்கு ஒரு நாள் முன்னதாக, மற்றொரு தீவிரக் கட்சியான யுனைடெட் தோரா ஜூடாயிசம் (UTJ) கட்சியும் இதே காரணத்திற்காக அரசாங்கத்திலிருந்து விலகியது.

இந்த இரண்டு முக்கிய கட்சிகளின் விலகல், நெதன்யாகு அரசாங்கத்தை பெரும் நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த இரு கட்சிகளின் விலகலுக்குப் பிறகு, நெதன்யாகுவின் கூட்டணிக்கு தற்போது 50 இடங்கள் மட்டுமே உள்ளன. ஆனால் பெரும்பான்மைக்கு 61 இடங்கள் தேவை. எனவே நெதன்யாகுவின் கூட்டணி பெரும்பான்மையை இழந்து சிறுபான்மை அரசாங்கமாக மாறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் அன்ட்ரே ரஸ்ஸல்

0

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட்டின் புகழ்பெற்ற சகலதுறை வீரர் அன்ட்ரே ரஸ்ஸல், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணி அடுத்ததாக அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாட உள்ளது. அந்தவகையில் இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளுடன் சர்வதேச கிரிக்கெட்டிற்கு 37 வயதான அன்ட்ரே ரஸ்ஸல் விடை கொடுக்கவுள்ளார்.

2010ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக தனது சர்வதேச அறிமுகத்தைப் பெற்ற ரஸ்ஸல், இதுவரை ஒரு டெஸ்ட், 56 ஒருநாள் போட்டிகள் மற்றும் 84 T20 போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் அன்ட்ரே ரஸ்ஸல் மேற்கிந்திய தீவுகள் அணி 2012 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் T20 உலகக் கிண்ணத்தினை வென்ற போது முக்கிய பங்களிப்பினையும் வழங்கியிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் 2026ஆம் ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணத் தொடர் நடைபெறும் நிலையில் ரஸ்ஸலின் ஓய்வானது மேற்கிந்திய தீவுகள் அணியின் கிரிக்கெட் இரசிகர்களுக்கு அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

தொடரைக் கைப்பற்றியது பங்களாதேஷ்!

0

இலங்கைக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரை பங்களாதேஷ் கைப்பற்றியது.

மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது போட்டியை இலங்கையும், இரண்டாவது போட்டியை பங்களாதேஷும் வென்றிருந்த நிலையில், கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் புதன்கிழமை (16) நடைபெற்ற மூன்றாவது போட்டியை வென்றமையைத் தொடர்ந்தே 2-1 என்ற ரீதியில் தொடரை பங்களாதேஷ் கைப்பற்றியது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கையணியின் தலைவர் சரித் அசலங்க தமதணி முதலில் துடுப்பெடுத்தாடுமென அறிவித்தார். இலங்கையணியில் கடந்த போட்டியில் விளையாடிய அவிஷ்க பெர்ணாண்டோ, சாமிக கருணாரத்னவை தினேஷ் சந்திமால், கமிந்து மென்டிஸ் பிரதியிட்டிருந்தனர். பங்களாதேஷில் கடந்த போட்டியில் விளையாடிய மெஹிடி ஹஸன் மிராஸை மஹெடி ஹஸன் பிரதியிட்டிருந்தார்.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை, ஷொரிஃபுல் இஸ்லாம், மஹெடி ஹஸன் (4), ஷமிம் ஹொஸைன், முஸ்தபிசூர் ரஹ்மானிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 132 ஓட்டங்களைப் பெற்றது. பதும் நிஸங்க 46 (39), தசுன் ஷானக ஆ.இ 35 (25) ஓட்டங்களைப் பெற்றனர்.

பதிலுக்கு 133 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ், தன்ஸிட் ஹஸனின் ஆட்டமிழக்காத 73 (47), லிட்டன் தாஸின் 32 (26), தெளஹிட் ஹிரிடோயின் ஆட்டமிழக்காத 27 (25) ஓட்டங்களோடு 16.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது.

இப்போட்டியின் நாயகனாக மஹெடியும், தொடரின் நாயகனாக லிட்டனும் தெரிவாகினர்.

ரிலாமுல்ல அருணோதயா பாடசாலையின் நான்காம் தர மாணவி உலக சாதனை!

0

தனிம வரிசை அட்டவணையில் உள்ள 118 தனிமங்களின் பெயர்கள், மனித உடலின் உள் உறுப்புகள் பலவற்றின் பெயர்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் மிகவும் குறைந்த நேரத்தில் கூறி சோழன் உலக சாதனை படைக்க மாணவி சங்கரதாஸ் கண்சிகா (16) இயன்றார் .

நுவரேலியா மாவட்டம் கந்தப்பளை, ரிலாமுல்ல அருணோதயா தொடக்கப் பாடசாலையின் 04 ஆம் ஆண்டில் கல்வி கற்று வரும் மாணவி சங்கரதாஸ் கன்சிகா தனிம வரிசை அட்டவணையில் உள்ள 118 தனிமங்களின் பெயர்களை 24 நொடிகளில் கூறிய அதேவேளை, மனித உடலின் உள் உறுப்புகள் 168 இன் பெயர்களை தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் 04 நிமிடங்களில் கூறினார்.

இவரது இந்த முயற்சியானது சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் துணைத் தலைவர் ஸ்ரீ நாக வாணி ராஜா மற்றும் கண்டி மாவட்டத் துணைத் தலைவர் சந்திரமோகன் முன்னிலையில் நடைபெற்றது.

மாணவியின் முயற்சியை மிகவும் உன்னிப்பாக கண்காணித்த நடுவர்கள் அதை உலக சாதனையாக அங்கீகரித்தார்கள்.

சோழன் உலக சாதனை படைத்த மாணவி கன்சிகாவிற்கு சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், பதக்கம், பேட்ச் மற்றும் பைல் போன்றவை நடுவர்கள் மற்றும் முதன்மை விருந்தினரான வலயக் கல்வி அலுவலக இயக்குநர் டி.எம்.எம்.பி.திசாநாயக பாடசாலையின் தலைமை ஆசிரியர் வீரமலை விஜேந்திரன் போன்றோரினால் வழங்கிப் பாராட்டப்பட்டது.

சோழன் உலக சாதனை படைத்த மாணவியை வலயக் கல்வி அலுவலக இயக்குநரும் மற்றும் பாடசாலையின் தலைமை ஆசிரியரும் வாழ்த்திச் சிறப்புரையாற்றினார்கள்.

சோழன் உலக சாதனை படைத்த மாணவியை சிறப்பு விருந்தினர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் வாழ்த்திப் பாராட்டினார்கள்.

குளவிக் கொட்டுக்கு இலக்கான தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதி!

0

அக்கரப்பத்தனை – ஊட்டுவள்ளி தோட்டத்தில், குளவி கொட்டுக்கு இலக்கான 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தேயிலை மலையில் பணி செய்துகொண்டிருந்த நிலையிலேயே, இவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஆண் தொழிலாளர்கள் என, எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மத்திய அதிவேக நெடுஞ்சாலை – 2027 இல் பணிகள் நிறைவு

0

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் பொத்துஹெரவிலிருந்து ரம்புக்கனை வரையிலான பகுதியின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு அறிவித்துள்ளது.

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளி செய்தியில், இந்த நோக்கத்திற்காக பல பகுதிகளில் நிலம் தயார் செய்யும் பணிகள் ஏற்கனவே இறுதி கட்டத்தில் இருப்பதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

பொத்துஹெரவிலிருந்து ரம்புக்கனை வரையிலான பகுதியின் நிர்மாணப் பணிகள் 2027 ஜனவரிக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை கூறியுள்ளது.