(எஸ்.ரோஷன்)
கொட்டகலை பிரதேச வைத்தியசாலையின் உத்தியோகஸ்தர்களின் மக்கள் நலன் சாராத கரிசனையற்ற செயற்பாடுகளினால் பொதுமக்கள் முகம் கொடுத்து வரும் அசௌகரியங்கள் சம்பந்தமாக கொட்டகலை பிரதேச சபை உறுப்பினர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இது தொடர்பில் கடந்த செவ்வாயன்று நுவரெலியா பிராந்திய சுகாதார அத்தியட்சகர் வைத்தியர் அசேல பெரேராவை சந்தித்த பிரதேச சபை உறுப்பினர்கள் ஆட்சேபனைகளை முன்வைத்திருந்தனர்.
இப்பிரச்சினை தொடர்பாக குழுவினரால் மகஜர் ஒன்றும் அத்தியட்சகரிடம் கையளிக்கப்பட்டது.
இந்த சந்திப்பில் முன்வைக்கப்பட்ட விடயங்களை வைத்திய அத்தியட்சகர் மிகவும் பொறுப்புடன் செவிமடுத்ததோடு வைத்தியசாலை நிலவரத்தை தானும் அறிந்திருந்ததாகவும் இந்த விடயத்திற்கு காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் இன்னும் இரண்டு வார காலத்திற்குள் இவ்வாறான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இச்சந்திப்பில் கொட்டகலை பிரதேச சபை உறுப்பினரும், வர்த்தக சங்கத் தலைவருமான புஸ்பா விஸ்வனநாதன் மற்றும் கொட்டகலை பிரதேச சபையின் உறுப்பினர்களான சிவசாமி பத்மநாதன், கணபதி கண்ணதாசன், வர்த்தக சங்கத்தின் உப தலைவர் பூவலிங்கம் மற்றும் செயலாளர் மதியழகன் ஆகியோர் இந்த விடயம் சம்பந்தமாக தெளிவூட்டி ஆட்சேபனைகளை முன் வைத்திருந்தனர்.




