SJBயின் அழுத்தம் காரணமாகவே மின் கட்டண அதிகரிப்பு நிறுத்தப்பட்டது – சஜித் பெருமிதம்!

0
18

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

நாட்டில் காணப்படும் வயதில் குறைந்த ஜனநாயக அரசியல் கட்சி ஐக்கிய மக்கள் சக்தி ஆகும். 2020 பெப்ரவரியில் ஸ்தாபிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தி 30 ஆண்டுகளாக தேர்தல்களுக்கு முகம்கொடுத்த அரசியல் கட்சியாக சிலர் கருதினாலும், ஐக்கிய மக்கள் சக்தி இதுவரை 4 தேர்தல்களை மட்டுமே எதிர்கொண்டுள்ளன. இக்காலப் பிரிவினுள் இந்நாட்டில் எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி பெரும் பணிகளை ஆற்றி வருகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அரசாங்கமும், மின்சார சபையும் சர்வதேச நாணய நிதியத்தின் அறிவுறுத்தல்கள் மற்றும் நிபந்தனைகளுக்கு இணங்க மின்சாரக் கட்டணத்தை 6.8% ஆல் அதிகரிக்க முனைந்த போது, அண்மைய நாட்களாக நானும் ஐக்கிய மக்கள் சக்தியினரும் நாடு முழுவதும் சென்று மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் வீதியில் இறங்கிப் போராடுவோம் என்று கூறி வந்தோம். மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்தை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று காலையிலயே நிராகரித்துள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் இன்று (14) கண்டியில் நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்க்கட்சியின் வகிபாகம் என்பது ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் இருந்து பேச்சுவார்த்தை நடத்துவதல்ல, மாறாக மக்களுக்கான உண்மையான பொறுப்பை நிறைவேற்றுவதாகும். இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எடுத்த இந்த முடிவுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் நியாயமற்ற மின்சாரக் கட்டண அதிகரிப்பு, ஐக்கிய மக்கள் சக்தியின் அழுத்தத்தின் காரணமாகவே நிறுத்தப்பட்டது. எதிர்வரும் நாட்களில் இந்த மின்சாரக் கட்டணத்தை 33% ஆல் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த தேர்தல் மேடைகளில் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் கூறியதன் பிரகாரம், ரூ.9000 கட்டணம் ரூ.6000 ஆகவும், ரூ.3000 கட்டணம் ரூ.2000 ஆகவும், 33% ஆலும் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு குறைக்காத பட்சத்தில், இந்நாட்டு மக்களுடன் சேர்ந்து வீதிகளில் இறங்கிப் போராடுவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்குமாறு சர்வதேச நாணய நிதியத்திடமிருந்தே அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகின்றன. தற்போதைய ஆளும் தரப்பினர் எதிர்க்கட்சியில் இருந்த சமயம், ​​முந்தைய அரசாங்கம் இணக்கப்பாடு கண்ட IMF ஒப்பந்தத்தில் திருத்தங்களை மேற்கொள்வதாக தெரிவித்தனர். ஆனால் தெளிவான அதிகாரத்தோடு ஆட்சியில் இருக்கும் இவர்கள் இன்னும் இந்த ஒப்பந்தத்தை மாற்றவில்லை. அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை மறந்துவிட்டு, சர்வதேச நாணய நிதியத்தின் அடிமைகளாக மாறி விட்டனர். இந்நாட்டு மக்கள் இப்போது மிகுந்த சிரமங்களுக்கு மத்தியிலயே வாழ்ந்து வருகின்றனர். இன்று நாட்டின் 50% க்கும் அதிகமானோர் ஏழ்மை நிலையை அடைந்துள்ளனர். மின்சாரக் கட்டணங்களை அதிகரித்து, சாதாரண மக்கள் மீது மேலும் அழுத்தத்தை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. டீல் இல்லாத, மக்களைக் காட்டிக் கொடுக்காத, நடைமுறைக்கு ஏற்ற, மக்கள் நலன் சார்ந்த, எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி, நாட்டு மக்களின் மனித மற்றும் அரசியல் உரிமைகளைப் பாதுகாக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here