சுற்றுலா இலங்கை – ஜிம்பாப்வே அணிகள் இடையிலான T20i தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் இலங்கை 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியினைப் பதிவு செய்திருப்பதோடு, மூன்று போட்டிகள் கொண்ட T20i தொடரினையும் 2-1 எனக் கைப்பற்றியுள்ளது.
ஹராரேவில் முன்னதாக ஆரம்பமாகிய இலங்கை – ஜிம்பாப்வே அணிகள் இடையிலான தீர்மானம் கொண்ட T20i தொடரின் மூன்றாவது போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற இலங்கை வீரர்கள் முதலில் துடுப்பாட்டத்தினை ஜிம்பாப்வேயிற்கு வழங்கினர்.
முதல் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த ஜிம்பாப்வே அணிக்கு தடிவான்சே மருமானி மிகச் சிறந்த ஆரம்பத்தினை வழங்கினார். 44 பந்துகளை எதிர்கொண்ட அவர் 6 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 51 ஓட்டங்களை பெற்றார்.
அதன் பின்னர் அவ்வணியின் மத்திய வரிசை வீரர்களின் குறுநேர அதிரடிகளுடன் ஜிம்பாப்வே 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 191 ஓட்டங்கள் பெற்றுக் கொண்டது. ஜிம்பாப்வே அணியின் மத்திய வரிசை வீரர்களில் ரயான் பர்ல் 15 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பௌண்டரி அடங்கலாக 26 ஓட்டங்கள் பெற்றார்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் துஷான் ஹேமன்த 3 விக்கெட்டுக்களையும், துஷ்மன்த சமீர 2 விக்கெட்டுக்களையும் சாய்த்தனர்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 192 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணியானது போட்டியின் வெற்றி இலக்கினை வெறும் 17.2 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 193 ஓட்டங்களுடன் அடைந்தது.
இலங்கைத் தரப்பின் வெற்றியினை உறுதி செய்த கமில் மிஷார தன்னுடய கன்னி T20i அரைச்சதம் பெற்றதோடு 43 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 73 ஓட்டங்கள் ஆட்டமிழக்காமல் பெற்றார். அத்துடன் இவருக்கு உறுதுணையாக இருந்த குசல் பெரேரா 26 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 46 ஓட்டங்களை ஆட்டமிழக்காது எடுத்தார்.
போட்டியின் ஆட்டநாயகனாக கமில் மிஷார தெரிவாக, தொடர் நாயகனாக துஷ்மன்த சமீர விருதினைப் பெற்றுக் கொண்டார்.
இப்போட்டி மூலம் இலங்கை T20i போட்டிகளில் தாம் துரத்தியடித்த இரண்டாவது அதிகூடிய ஓட்டங்களை (192) பதிவு செய்ததோடு, ஜிம்பாபவே மண்ணில் தம்முடைய முதல் T20i தொடர் வெற்றியினையும் பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.