ஹட்டன் தொண்டமான் தொழிற் பயிற்சி நிலையமான TVTC கட்டடம் நுவரெலியா மாவட்டத்தில் இனங்காணப்படும் கொரோனா தொற்றாளர்களை தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்கும் நிலையமாக மாற்றியமைக்க நுவரெலியா மாவட்ட கொரோனா தொற்று ஒழிப்பு மையத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளது.
தோட்ட வீடமைப்பு மற்றும் சமூதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சரின் பணிப்பின் பேரில் இந்த கட்டடம் நுவரெலியா மாவட்ட கொரோனா தொற்றாளர்கள் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு பொறுப்பான சிங்க ரெஜினல் கமாண்டோ அசித்த ரனதிலக்க உள்ளிட்ட அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது. மேலும் தொண்டமான் தொழிற் பயிற்சி நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள பயிற்சிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இக்கட்டடத்தை தனிமைப்படுத்தி சிகிச்சை வழங்கும் நிலையமாக மாற்றப்பட்டுள்ளதுடன் இந்நிலையத்தில் அனுமதிக்கப்படும் தொற்றாளர்களுக்கான படுக்கை வசதிகளுக்கான உபகரணங்கள் உள்ளிட்ட சுகாதார மற்றும் அடிப்படை வசதிகளை இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் ஒழுங்கு செய்து கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் நுவரெலியா மாவட்டத்தில் கொரோனா தொற்று ஒழிப்புக்கென செய்யப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் முன்கூட்டிய ஏற்பாடுகள் அதன் ஒழுங்கு முறைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது நுவரெலியாவில் கொரோனாவை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர 2 ஆயிரம் படுக்கை வசதிகளை கொண்ட தனிமைப்படுத்தல் நிலையங்கள் இருப்பின் நிச்சயமாக கொரோனாவை கட்டுப்படுத்த முடியுமென மாவட்ட சுகாதார பிரிவினர் இராஜாங்க அமைச்சரிடம் கோரிக்கை முன்வைத்தனர்.
இதனடிப்படையில் இறம்பொடை தொண்டமான் கலாச்சார மண்டபம் தனிமைப்படுத்தல் நிலையமாக வழங்கப்பட்டது. தற்போது ஹட்டன் தொண்டமான் தொழிற் பயிற்சி நிலையம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இடங்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்காக தயார்ப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுமென இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அதிகாரிகளுக்கு தெரிவித்தார்.
அத்துடன் ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய கற்கை நெறிகள் ஒன்லைன் தொழிநுட்ட ரீதியாக மாணவர்களுக்கு முன்னெடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இந்த கலந்துரையாடலில் நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட, மாவட்ட சுகாதார பணிப்பாளர் மனதுங்க, பிராந்திய சுகாதார பணிப்பாளர் நிகால் விஜயசூரியஉள்ளிட்ட இராணுவ அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.