(எஸ்.ரோஷன்)
மலேசிய அரசினால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச சிலம்பப் போட்டி 2025 (VEERAM INTERNATIONAL SILAMBAM CHAMPIONSHIP 2025) செப்டம்பர் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் மலேசியா, கோலாலம்பூரில் நடைபெற்றது. இப்போட்டியில் பங்கேற்ற இலங்கை சிலம்ப அணி பங்குபற்றிச் சிறப்பான சாதனையைப் பதிவு செய்தது.
இப்போட்டியில் இலங்கை அணி மொத்தம் 11 (தங்கம் – 1, வெள்ளி – 4, வெண்கலம் – 6 ) பதக்கங்களை வென்றுள்ளது.
வயது பிரிவு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த (கொட்டகலை, வட்டவளை, பத்தனை, திருகோணமலை) ஐந்து வீரர்களுக்கான விமான டிக்கெட்டுகளை இலங்கை சிலம்பச் சம்மேளனத்திற்கு மலேசிய அரசு வழங்கியது.
பல நாடுகளில் உள்ள சிலம்ப அமைப்புகளுடன் இணைந்து சிறப்பாகச் செயற்பட்டு வந்ததற்காக இலங்கை சிலம்பச் சம்மேளனத்திற்கு மலேசிய அரசு விசேட அங்கீகாரமாக இலவச விமான டிக்கெட்டுகளை வழங்கியதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
பயிற்றுவிப்பாளரான ஆசான் ரா. திவாகரனும், முகாமையாளரான என். ஜெகதீஸ் ஆகியோரும் வழிநடத்திய நிலையில் வீரர்கள் தங்களது திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளனர்.
இவ்வாய்ப்பை முன்னிட்டு, இலங்கையிலும் சிலம்பக் கலைக்கு உரிய முக்கியத்துவத்தை அரசாங்கம் வழங்க வேண்டும் என இலங்கை சிலம்பச் சம்மேளனம் வலியுறுத்தியது.