ஏர் இந்தியா விமான விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய விஸ்வாஸ் குமார் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் தவிக்கிறார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து ஜூன் 12-ம் திகதி லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சில விநாடிகளில் கீழே விழுந்து நொறுங்கியது. இதில் விமானப் பயணிகள், ஊழியர்கள் 241 பேர் உயிரிழந்தனர்.
அத்துடன் விமானம் மருத்துவ கல்லூரி விடுதி மீது விழுந்ததில் அங்கிருந்த முதுகலை மாணவர்கள் உட்பட 19 பேர் இறந்தனர். இந்த விபத்தில் விமானத்தில் 11ஏ இருக்கையில் பயணித்த விஸ்வாஸ் குமார் ரமேஷ் (40) என்ற பயணி மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அவருடைய சகோதரர் விமான விபத்தில் உயிரிழந்தார்.
விபத்தில் காயம் அடைந்த விஸ்வாஸ், அகமதாபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவரை பிரதமர் மோடி சந்தித்து ஆறுதல் கூறினார். பிரிட்டனில் வசிக்கும் விஸ்வாஸ், இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். அவருடைய குடும்பத்தினர் டாமன் அண்ட் டையு தீவில் கடலோர நகரமாக உள்ள டையுவில் வசிக்கின்றனர்.
அவர்களை சந்திக்க இந்தியா வந்துள்ளார் விஸ்வாஸ். சில நாட்கள் குடும்பத்துடன் இருந்து விட்டு லண்டன் திரும்பும் போதுதான் விபத்தில் சிக்கியுள்ளார். ஆனால், விமான விபத்தின் அதிர்ச்சியில் இருந்து அவரால் மீள முடியாமல் தவிக்கிறார்.
இதுகுறித்து விஸ்வாஸ் குமாரின் உறவினர் ஒருவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: விமான விபத்துக்குப் பிறகு உறவினர்கள் பலர் மற்றும் லண்டனில் இருந்து பலர் தொலைபேசியில் அழைத்து விஸ்வாஸ் எப்படி இருக்கிறார் என்று கேட்கின்றனர். ஆனால், அவர் யாரிடமும் பேசுவதில்லை.
விமான விபத்தில் இருந்து தப்பியது, அவரது சகோதரர் உயிரிழந்தது, விபத்து நடந்த இடத்தில் அவர் கண்ட காட்சிகள் என பலவும் அவரை பெரிதாக பாதித்துள்ளது. அதனால் அவர் நள்ளிரவில் திடீரென தூக்கத்தில் இருந்து எழுந்து கொள்கிறார். அதன்பிறகு மன அழுத்தத்தால் அவர் தூங்க முடியாமல் தவிக்கிறார்.
எனவே, கடந்த 2 நாட்களுக்கு முன்னர்தான் விஸ்வாஸை மனநல மருத்துவரிடம் அழைத்து சென்றோம். சகோதரர் உயிரிழந்த சோகத்தில் இருந்து அவரால் மீள முடியவில்லை. அந்த அதிர்ச்சியில் இருந்து அவரை எப்படியாவது மீட்டு வர வேண்டும் என்று முயற்சிக்கிறோம். லண்டன் திரும்பி செல்வது பற்றி அவர் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. இப்போதுதான் மனநல சிகிச்சை தொடங்கி உள்ளது. இவ்வாறு விஸ்வாஸின் உறவினர் கூறினார்.