அக்கரப்பத்தனை பகுதியில் மூடப்பட்ட சமூர்த்தி காரியாலயத்தை மீள திறக்கப்பட வேண்டும் என அக்கரப்பத்தனை பிரதேச சபை உறுப்பினர் ராமன் கோபால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அக்கரப்பத்தனை பிரதேச சபைக்குட்பட்ட அக்கரப்பத்தனை நகரத்தில் சமூர்த்தி பயனாளர்களின் நலன் கருதி கடந்த ஆறுமாத காலத்திற்கு முன் சமூர்த்தி காரியாலயம் திறக்கப்பட்டது.அக்கரப்பத்தனை,டயகம,மன்றாசி,பசுமலை உள்ளிட்ட நகரங்களை மையமாக கொண்டு காணப்படும் தோட்டங்களை மையப்படுத்தியும் அங்கு காணப்படும் சமூர்த்தி பயனாளிகளின் நன்மை கருதியும் குறித்த சமூர்த்தி காரியாலயம் அமைக்கப்பட்டது. ஆனால் திறக்கப்பட்ட ஆறுமாதத்திற்குள்ளேயே மூடுவிழா கண்டுள்ளமை சமூர்த்தி பயனாளிகளிடத்தே பெறும் அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏறத்தாழ 15000க்கு அதிகமான சமூர்த்தி பயனாளிகளை கொண்டுள்ள இப்பகுதியில் சமூர்த்தி காரியாலயத்திற்கு செல்ல வேண்டுமென்றால் 18 கிலோமீற்றர் தொலைவில் காணப்படும் லிந்துலை சமூர்த்தி காரியாலயத்திற்கே செல்லவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த ஆறுமாத காலத்திற்கு முன்பு அக்கரப்பத்தனை பகுதியில் அமைக்கப்பட்ட சமூர்த்தி காரியாலயம் திறக்கப்பட்டதிலிருந்து இன்றுவரை மூடப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றது.இக்காரியாலயத்திற்கு நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர்களும் மீள லிந்துலை காரியாலயத்திற்கே திருப்பியனுப்பட்டுள்ளனர்.இவ்விடயம் தொடர்பாக லிந்துலை சமூர்த்தி காரியால தலைமை உத்தியோகத்தரிடமும் இ.தொ.கா. பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானிடம் அறிவித்துள்ளதாகவும் மேலும் மாதாந்த சபை கூட்டத்தொடரில் இது தொடர்பில் விவாதிக்கப்பட்டுள்ளதாகவும் ராமன் கோபால் தெரிவித்தார்.
எனவே தற்போதைய சூழ்நிலையில் போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் லிந்துலை காரியாலயத்திற்கு வந்து செல்வதில் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.எனவே விரைவாக மீளவும் அக்கரப்பத்தனையில் மூடப்பட்ட சமூர்த்தி காரியாலயம் திறக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென அக்கரப்பத்தனை பிரதேச சபை உறுப்பினர் ராமன் கோபால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நீலமேகம் பிரசாந்த்