வங்காள விரிகுடாவில் உருவாகும் ஒரு அசாதாரண நிலை காரணமாக அக்டோபர் 21 ஆம் திகதிக்கு பின்னர் கடும் மழை பெய்யும் என்று வழமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் தென்கிழக்கில் தற்போது நிலைகொண்டுள்ள வளிமண்டல குழப்பநிலை, குறைந்த அழுத்தப் பகுதியாக உருவாகி, தீவின் பெரும்பாலான பகுதிகளில் கடும் மழை பெய்ய காரணமாக அமையும் என திணைக்களத்தின் பணிப்பாளர் ஜெனரல் அதுல கருணாநாயக்க தெரிவித்தார்.
இந்த அமைப்பு இலங்கையை நேரடியாகப் பாதிக்காது என்றாலும், நாட்டில் கடுமையாக மழை பெய்யும் என்று அவர் மேலும் கூறினார்.
இதற்கிடையில், மழைக்காலம் தொடர்வதால் பதுளை, கண்டி, கேகாலை, மாத்தளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய ஆறு மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு (NBRO) மண்சரிவு எச்சரிக்கையை நீட்டித்துள்ளது.
இந்தப் பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சிரேஷ்ட ஆய்வாளர் டொக்டர் வசந்த சேனாதீர தெரிவித்தார்.
இதேநேரம் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நிலவும் சீரற்றவானிலை காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார் எனவும் அனுராதபுரம் மற்றும் குருநாகல் மாவட்டங்கள் கனமழையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.