புதிய கல்வி சீர்திருத்த செயல்முறையில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் இடமாற்றம் முறையாக வழங்கப்பட வேண்டும் என்று பிரதமர் டொக்டர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மத்திய அரசு மற்றும் மாகாண சபைகள் சரியான ஒருங்கிணைப்பைப் பேண வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து மாகாண, பிராந்திய மற்றும் பிரதேச மட்டங்களில் கல்வி மற்றும் நிர்வாக அதிகாரிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தொடங்கப்பட்ட கலந்துரையாடலின் போது பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
புதிய கல்வி சீர்திருத்தத்தின் மூலம் பாடத்திட்ட திருத்தம், மதிப்பீடு மற்றும் மதிப்பீட்டு செயல்முறை, உட் கட்டமைப்பு அபிவிருத்தி, ஆசிரியர், அதிபர் மற்றும் கல்வி நிர்வாக வெற்றிடங்களைக் குறைத்தல், மாகாண சபைக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான சரியான ஒருங்கிணைப்பை பேணுதல் , மாகாண சபை மட்டத்தில் இருக்கும் பிரச்சினைகளைப் ஆராய்ந்து உடனடி தீர்வுகளை வழங்குவது குறித்து இதன்போது விவாதிக்கப்பட்டது.
“தற்போதுள்ள கல்வி முறை மாற வேண்டும் என்பதை நாம் அனைவரும் ஏற்றுக் கொள்கிறோம், அதற்காக இந்த சீர்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, தற்போதுள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்ப்படுத்த வேண்டும், நிர்வாக கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும், மேலும் டிஜிட்டல் மயமாக்கலும் அவசியம்” என பிரதமர் இதன்போது தெரிவித்திருந்தார்.