கோதுமை மா உட்பட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் சடுதியான விலையேற்றத்தினால் குறைந்த வருமானத்தைப் பெறுகின்ற தோட்டத் தொழிலாளர்களும் ஏனையோரும் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
பால்மா, கோதுமைமா அரிசி, எரிவாயு சிலிண்டர் உட்பட அத்தியாவசிய பொருட்கள் கட்டுப்பாடற்ற வகையில் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இத்தகைய திடீர் விலையேற்றம் காரணமாக குறைந்த வருமானத்தைப் பெறுகின்ற நாட்டு மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக தோட்டத் தொழிலாளர்கள் கடந்த பல மாதங்களாக குறைந்த சம்பளத்தேயை பெற்று வருகின்றனர். இவ்வாறானதொரு நிலையில் நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் சேவைகளின் விலை மற்றும் கட்டண அதிகரிப்பினால் தோட்டத் தொழிலாளர்களும் அவர்களைச் சார்ந்த குடும்பத்தினரும் வறுமை நிலையை எதிர்நோக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதார கட்டமைப்பைச் சீர்செய்ய முடியாத நிலைமையில் அரசாங்கம் தத்தளிக்கிறது. அரசாங்கத் தரப்பில் உள்ளவர்கள் மக்களின் பிரச்சினைகள், தேவைகளை அறிந்து தீர்மானங்கள் எடுக்காமல் விதண்டாவாத கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். இந்த நிலைமை தொடருமானால் நாட்டில் பாரிய பஞ்சத்தை எதிர்நோக்கிய நிலைமை தமக்கு ஏற்பட்டுவிடும் என்று மக்கள் அஞ்சத் தொடங்கி உள்ளனர்.