நேபாளத்தில் வெடித்த கலவரத்தை உதாரணம்காட்டி தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர.
” நம்பிக்கை தவிடுபொடியாகியுள்ளதாலும், வேலையின்மையாலும் இந்த அரசுக்கு எதிராக இளைஞர்கள் கிளர்ந்தெழும் நாள் வெகுதொலைவில் இல்லை.” – எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றிய தயாசிறி ஜயசேகர கூறியவை வருமாறு,
” நேபாளத்தில் முன்னாள் சபாநாயகரின் மனைவி எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான செய்திகளின்போது இலங்கையில் அறகலயவின்போது நடைபெற்ற சம்பவங்களே முதலில் காண்பிக்கப்படுகின்றன.
ஜனாதிபதி மாளிகை கையக்கப்படுத்தப்பட்டமை, அங்கு அரங்கேற்றப்பட்ட சம்பவங்கள் , நீச்சல் தடாகத்தில் குளித்தமை, ஜனாதிபதியின் கட்டியில் படுத்தமை போன்ற நாட்டை நாசமாக்கிய காட்சிகள் காண்பிக்கப்படுகின்றன.
இலங்கையிலும் நாடாளுமன்றத்தை கைப்பற்றுவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. லாந்காந்தா, சுனில் ஹந்துனெத்தி போன்றவர்களை வந்து இவ்வாறு அழைப்பு விடுத்திருந்தனர்.
ஆனால் ரணில் விக்கிரமசிங்க அவசர காலசட்டத்தை அமுல்படுத்தி, இராணுவத்தை களமிறக்கி அம்முயற்சியை முறியடித்திருக்காவிட்டால் இன்று நாடாளுமன்றம் இருந்திருக்காது. நேபாளத்தில் இன்று இப்படி நடந்துள்ளது. பங்களாதேஷில்தான் இது ஆரம்பமானது.
தேசிய மக்கள் சக்தி இந்நாட்டுக்கு ஒன்றையும் செய்யவில்லை. நபர்களை சிறையில் அடைக்கும் செயல் மட்டுமே இடம்பெறுகின்றது. தேசிய மக்கள் சக்தி தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை அமுல்படுத்துவதில் பிரச்சினை கிடையாது.
ஆனால் என்றாவது ஒருநாள் மக்கள் அதற்கு எதிராக திரும்பி, உங்களை (தேசிய மக்கள் சக்தியினரை)தாக்குவார்கள். அந்த காலம்வரும்போது உங்கள் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்களைதான் முதலில் பாதுகாத்தக்கொள்ள வேண்டும். எமக்கு பிரச்சினை இல்லை. நாம் எதற்கும் தயார்.
இன்று இளைஞர்கள் வேலையில்லாம் இருக்கின்றனர். பட்டதாரிகளுக்கும் வேலை இல்லை. எனவே, அவர்கள் கிளர்ந்தெழுவார்கள். அதற்குரிய நாள் தொலைவில்லை இல்லை. அப்போது நேபாளத்தில் நடந்ததுபோல் இங்கு பார்த்துக்கொண்டிருக்க வேண்டிவரும்.” – என்றார்.