அபிவிருத்தி உத்தியோகத்தர்களை அரசாங்கம் ஏமாற்றிவிட்டது!

0
58

தேர்தல் காலத்தில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி, வேலையில்லாப் பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஏமாற்றி அவர்களது வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம், தற்போது அவர்களுக்கு தொழிலைப் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கையை கைவிடும் நிலைக்கு வந்துள்ளது. பிரதமர் முன்வைத்த அமைச்சரவைப் பத்திரத்தின்படி, நாட்டில் தற்போது சுமார் 50,000 பட்டதாரி தொழில் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. ஆகவே, இவர்களுக்கு உரிய நீதியைப் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் தமக்கு தொழில் பெற்றுத் தருமாறு கோரி அமைதி வழியிலான போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். குறித்த ஆர்ப்பாட்ட இடத்துக்கு விஜயம் செய்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்தார். பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் 35,000 தொழில் வாய்ப்புகளை எவ்வாறு பெற்றுத் தருவோம் என்பதை விரிவாக விளக்கியிருந்தது. ஆனால் இன்று அவை அனைத்தையும் மறந்துவிட்டு செயற்பட்டு வருகிறது. இவ்வாறு இந்த ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை நிரந்தரமாக உள்ளீர்த்துக் கொள்ளாமல் இருப்பது நியாயமற்ற செயலாகும் என்பதால், பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பல சந்தர்ப்பங்களில் நான் இது தொடர்பில் பேசி இருக்கிறேன். இவர்களின் உரிமைகளுக்காக தான் தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here