அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி குடியரசு கட்சி சார்பில் போட்டியிட விருப்பமனு கையளித்துள்ளார்.
அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், தற்போதைய அதிபர் ஜோ பைடன் ஆகியோர் மீண்டும் போட்டியிடவுள்ளதாக அறிவித்திருந்தனர்.
தற்போது இந்த வரிசையில் குடியரசு கட்சி சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.
குடியரசுக்கட்சியில் இருந்து வேறு எவரும் தன்னை எதிர்த்து போட்டியிடக்கூடாது என டிரம்ப் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளமை அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மருந்து நிறுவனத்தை நடத்தி வரும் 37 வயதான விவேக் ராமசாமி சிறந்த தொழிலதிபர் என்பதுடன், அவரின் சொத்து மதிப்பு ரூ.4,140 கோடி என்று கூறப்படுகின்றது.
அமெரிக்க தேசியவாதத்தில் தீவிர நம்பிக்கை கொண்ட இவருக்கு குடியரசு கட்சியில் நல்ல செல்வாக்கு இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் மாகாண கவர்னரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான நிக்கி ஹாலே போட்டியிடவுள்ளதாக அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.