அமைச்சர், ஆலோசகர் தரத்திலுள்ள சிரேஷ்ட வெளிநாட்டு சேவையின் ஒரு உறுப்பினரான ஜேன் ஹொவெல் இலங்கையின் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் தூதரக பிரதித் தலைமை அதிகாரியாக ஜூன் மாதம் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய இரு நாடுகளிலும் தூதரக அலுவல்களுக்கான அமைச்சர் ஆலோசகராக (MCCA) பதவி வகித்தமை உட்பட விரிவான வெளிநாட்டு அனுபவத்தை ஜேன் கொண்டுள்ளார்.
அவ்விரு நாடுகளிலும் அவர் குடியேற்றம் மற்றம் வீசா கொள்கை தொடர்பான தூதுவரின் சிரேஷ்ட ஆலோசகராகப் பணியாற்றியதுடன், ஒவ்வொரு வருடமும் அந்நாடுகளுக்கு வருகை தரும் ஆயிரக்கணக்கான அமெரிக்கக் குடி மக்களுக்காக நாடு தழுவிய சேவைகளையும் ஒருங்கிணைத்துள்ளார்.
அக்ரா-கானா, ஹராரே-ஜிம்பாபே மற்றும் காபூல்-ஆப்கானிஸ்தான் ஆகிய இடங்களிலும் கொன்சியுலர் பிரிவின் பிரதானியாகவும் ஜேன் பணியாற்றியுள்ளார்.
வொஷிங்டனில், கொன்சியுலர் அலுவல்கள் பணியகத்தில், பிரதி நிறைவேற்றுப் பணிப்பாளர், பிராந்திய கொன்சியுலர் மேற்பார்வை அதிகாரி மற்றும் கொன்சியுலர் அலுவல்கள் பணியகத்தின் தலைமைத்துவ மற்றும் முகாமைத்துவ சிறப்பு நிகழ்ச்சித் திட்டமான 1CA இன் ஆரம்ப பணியாளர் உள்ளிட்ட பல சிரேஷ்ட தலைமைப் பதவிகளிலும் ஜேன் பணியாற்றியுள்ளார்.
1CA நிகழ்ச்சித் திட்டத்தில் அவர் ஆற்றிய பணிகளுக்காக முகாமைத்துவ மேம்பாட்டிற்கான இராஜாங்கத் திணைக்களத்தின் லூதர் ஐ. ரெப்லோகிள் விருதினை ஜேன் பெற்றுக் கொண்டார்.
தென் கரோலினாவின் சார்லஸ்டன் நகரைச் சேர்ந்த ஜேன், ஒஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் தொல்பொருள் கற்கைகளில் கலை இளமானிப் பட்டமொன்றைப் பெற்றுள்ளார். ஜேன் தனது பணிகள் தவிர, பண்டைய மற்றும் வரலாற்று தளங்களை ஆர்வத்துடன் ஆராய்வதிலும், முடிந்த போதெல்லாம் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடுவதிலும் மற்றும் தான் செல்லும் நாடுகளில் காணப்படும் பாராம்பரிய உணவு வகைகளை ருசி பார்ப்பதிலும் அவற்றை சமைக்க கற்றுக் கொள்வதிலும் நாட்டமுடையவராவார்.