அமெரிக்காவுடன் விளையாடினால் கூடுதல் வரி விதிக்கப்படும்: டிரம்ப் எச்சரிக்கை!

0
5

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் உலக நாடுகளுக்கு விதித்த வரிகள் செல்லாது என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்த நிலையில், தனக்கான தனிப்பட்ட அதிகாரம் கொண்டு முதலில் 10 சதவீதமும் பின்னர் உச்சபட்ச அளவான 15 சதவீதம் அளவுக்கு உலக நாடுகளுக்கான வரிகளை விதித்து டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டார்.

இந்நிலையில் அவர் வெளியிட்ட மற்றொரு செய்தியில், சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பை வைத்து அமெரிக்காவுடன் விளையாடினால், அதுவும் அமெரிக்காவை பல ஆண்டுகளாக, பல தசாப்தங்களாக மோசடி செய்து, கூடுதல் விலைக்கு பொருட்களை விற்று வந்த அந்த நாடுகளுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்றார்.

சமீபத்தில் அவர்கள் ஒப்பு கொண்ட வரியை விட கூடுதலாக விதிக்கப்படும் அளவுக்கு நிலைமை மோசமடைந்து விடும். அதனால், எச்சரிக்கையாக இருங்கள். இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தியதற்கு நன்றி என தெரிவித்து உள்ளார்.

உலகளவில் 15 சதவீத வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்த நிலையில், அந்நாட்டுடன் ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொள்ள இருந்த வர்த்தக ஒப்பந்தம் முடிவு செய்யப்படாமல், நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று, அமெரிக்கா மற்றும் இந்தியா இடையே வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தை தேதி பின்னர் அறிவிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு வரி விதிப்பு செல்லாது என அறிவித்த போதிலும், வரிவிதிப்பதற்கு என ஜனாதிபதி டிரம்ப்புக்கு நாடாளுமன்றம் அளித்த பிற பரவலான அதிகாரங்கள் உள்ளன. இதன்படி வர்த்தக சட்டம் 1974, பிரிவு 122-ன் கீழ் 10 சதவீத வரி விதிப்புக்கான உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டார்.

இந்த சட்ட பிரிவின்படி, தற்காலிக அடிப்படையில், 150 நாட்களுக்கு இறக்குமதி வரியை அதிகபட்சம் 15 சதவீதம் வரை உயர்த்த டிரம்புக்கு அதிகாரம் உள்ளது. இதனால், அவர் வரியை 10 சதவீதத்தில் இருந்து 15 சதவீதம் என்ற அளவுக்கு உயர்த்தி அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here