வேலை நிறுத்தங்களில் பங்கேற்காத அரச ஊழியர்களுக்கு ரூபா 10,000
ஒரே தடவையில் வழங்க அமைச்சரவை அனுமதி
சில தினங்களுக்கு முன்னர் அரசாங்க ஊழியர்கள் மேற்கொண்ட வேலை நிறுத்தத்தில் பங்கேற்காது, கடமைக்கு சமுகமளித்த நிறைவேற்றுத் தரத்துக்கு கீழுள்ள அரசாங்க ஊழியர்களுக்கு கொடுப்பனவு வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி அந்த தினங்களில் கடமைக்கு சமுகமளித்த அரசாங்க ஊழியர்களுக்காக ஒரே தடவையில் 10,000 ரூபா கொடுப்பனவையும் சான்றிதழையும் வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நிதி அமைச்சரென்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்துள்ள யோசனைக்கே, அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.இதன் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் அவர்களுக்கான அன்றாட சேவைகளை வழங்குவதற்கு அரசாங்கம் முன்னுரிமையளித்து செயற்பட்டு வருகிறது. சில முக்கியமான சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. எனினும் சில கோரிக்கைகளை முன் வைத்து அரசதுறை தொழிற்சங்கங்கள் சில வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன. இதனால் பொதுமக்கள் தமது அன்றாட சேவைகளை பெற்றுக் கொள்வதில் அசௌகரியங்களை எதிர் கொள்ள நேர்ந்தது.
எனினும் அரசாங்க ஊழியர்களில் சில தரப்பினர் வேலை நிறுத்தப் போராட்டங்களில் கலந்து கொள்ளாது,குறித்த அந்த தினங்களிலும் கடமைக்கு சமுகமளித்தனர். இவர்களுக்கு விசேட கொடுப்பனவொன்றை வழங்குவதாக அரசாங்கம் அறிவித்திருந்தது. இதன்படியே அவர்களுக்கு பத்தாயிரம் ரூபா கொடுப்பனவும் சான்றிதழும் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.