நுவரெலியா டிப்போவிற்கு சொந்தமான NC – 9550 என்ற இலக்கத்தகடு கொண்ட இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து நுவரெலியா தலவாக்கலை பிரதான வீதியில் சேவையில் இயங்கியது தற்போது சுமார் இரண்டு வாரங்களுக்கு மேலாக சேவையில் இல்லை இவ்வாறான செய்பாடு தொடர்ந்து கொண்டே இருப்பதாகவும் , இது தொடர்பாக நுவரெலியா இ.போ.ச டிப்போ முகாமையாளரை தொடர்பு கொண்டு வினவப்பட்ட போது அசமந்தமான பதில் கூறுவதாகவும் குற்றம் முன்வைக்கப்பட்டுள்ளது.
சுமார் 60க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் தான் வசிக்கும் பிரதேசத்தில் இருந்து பாடசாலைக்கும் இடையில் சுமார் பத்து கிலோமீற்றக்கும் அதிகமான இடைவெளி காணப்படுவதால் பாடசாலை செல்லும் நேரத்தில் இவ் பேருந்து மாத்திரம் சேவையில் இருந்ததாகவும் , இவ்வாறான நிலையில் திடீரென பேருந்து நிறுத்தியமையால் பேருந்துக்காக காத்திருக்கும் மாணவர்களை ஏமாற்றம் அடையும் செய்பாடு தொடர்ந்து கொண்டே இருப்பதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பாடசாலைக்கு உரிய நேரத்திற்கு செல்லவோ, பாடசாலையிலிருந்து மீண்டும் உரிய நேரத்திற்கு வீடு திரும்பவோ முடியாத நிலைமையில் மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
குறிப்பாக மாணவர்கள் மாத்திரமன்றி குறித்த பிரதேசங்களில் இருந்து காலை நுவரெலியா , நானுஓயா பிரதான நகரங்களுக்கு செல்கின்ற பொதுமக்கள் வயோதிபர்கள் நோயாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பேருந்து சேவை நிருத்தத்தால் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
இவ் பேருந்து சேவை நிருத்தம் சம்பவம் தொடர்பாக நுவரெலியா இ.போ.ச முகாமையாளரை தொடர்பு கொண்டு வினவிய போது NC – 9550 இலக்கத்தகடு கொண்ட பேருந்தினை இயக்கி வந்த சாரதி தற்போது விடுமுறை சென்று மீண்டும் தொழிலுக்கு வராத காரணத்தால் பேருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் , சாரதி விடுமுறை முடித்து தொழிலுக்கு வந்தால் மீண்டும் இவ் அரச பேருந்து இயக்கப்படும் என்ற அசமந்தமான பதிலை தெரிவித்து வருவதாகவும் குற்றம் சுமத்துகின்றனர்.
நுவரெலியா – தலவாக்கலை மாணவர்கள் ஏ – 7 வீதியூடாக ஏனைய பல போக்குவரத்து சேவைகள் இடம்பெறுகின்ற போதும் பாடசாலை மாணவர்களுக்கான சேவையை வழங்குவதில் பேருந்து சாரதிகள் நடத்துனர்கள் உரியமுறையில் செயல்படவில்லை , குறிப்பாக டயகாமத்தில் இருந்து நுவரெலியா செல்லும் அரச மற்றும் தனியார் பேருந்துக்கள் மாணவர்கள் வீதியில் நின்று பேருந்தை மறிக்கும் போதும் அவர்களை ஏற்றாது செல்கின்ற செயற்பாட்டில் ஈடுபடுவதாக பாடசாலை மாணவர்களின் பெற்றோர் தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வருகின்றனர்.
எனவே இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியில் பாடசாலை நேரத்தில் இடம் பெறுகின்ற பேருந்து சேவையை நிறுத்தாமல் , பேருந்து அனைத்திலும் மாணவர்கள் , பொது மக்கள் இலகுவாக சென்று வரக்கூடிய வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கையை முன்வைக்கின்றனர்.
டி.சந்ரு செ.திவாகரன்